பிரிட்டைன் நாட்டில் சிறந்த திரைப்படங்களுக்கான ‘பாஃப்ட்டா’ விருதுக்கு ‘டைட்டானிக்’ அறிமுக நாயகனான லியோனார்டோ டி காப்ரியோ நடிப்பில் வெளியான ‘தி ரெவனெண்ட்’ தேர்வாகியுள்ளது.
இப்படத்தில் காட்டுக்குள் சிக்கி, கரடியிடம் கடிபட்டு, தன்னம்பிக்கையுடன் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடும் நாயகனாக நடித்த லியோனார்டோ டி காப்ரியோ சிறந்த நடிகராகவும், இதே படத்தை இயக்கிய அலேஜாண்ட்ரோ கோன்ஸாலேஸ் இனாரிட்டு சிறந்த டைரக்டராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறந்த ஒளிப்பதிவு, ஒலிசேர்க்கை, ஆகிய விருதுகளையும் சேர்த்து மொத்தம் ஐந்து பாஃப்ட்டா விருதுகளை ‘தி ரெவனெண்ட்’ பெற்றுள்ளது.
கைக்குழந்தையுடன் கடத்தப்பட்டு ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்ட பெண் அனுபவிக்கும் வேதனையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘ரூம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரயி லார்சன் சிறந்த நடிகையாக தேர்வாகியுள்ளார்.
இந்திய-பிரிட்டைன் இயக்குனரின் ‘அமி’, சிறந்த ஆவணப்படமாக தேர்வானது. மறைந்த பின்னணி மற்றும் பாப் பாடகி அமி வைன்ஹவுஸ்-ன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
உலகின் அழிவுக்காலத்தை சித்தரிக்கும் ஆக்ஷன் படமான ‘மேட் மேக்ஸ்: பியூரி ரோட்’ படம் சிறந்த சிகையலங்காரம் மற்றும் ஒப்பனை, படத்தொகுப்பு, ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என ஒருசேர நான்கு விருதுகளை தட்டிச் சென்றது.
‘பிரிட்ஜ் ஆப் ஸ்பைஸ்’ படத்தில் ரஷிய உளவாளியாக நடித்துள்ள மார்க் ரைலான்ஸ் சிறந்த துணை நடிகராகவும், ‘டைட்டானிக்’ நாயகி கேட் வின்ஸ்லெட், ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ படத்தில் பெண் காரியதரிசியாக தோற்றமளித்ததற்காக சிறந்த துணை நடிகயாகவும் தேர்வாகியுள்ளனர்.
பத்திரிகையாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்பாட்லைட்’ சிறந்த (ஒரிஜினல்) திரைக்கதைக்கான விருதையும், ‘தி பிக் ஷார்ட்’ படம் சிறந்த (தழுவல்) திரைக்கதைக்கான விருதையும் வென்றுள்ளது.
லண்டன் நகரில் நடைபெற்ற கோலாகல விழாவில் தேர்வான கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சமீபத்தில் மரணம் அடைந்த பிரிட்டைன் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர்களான ஒமர் ஷெரிப், சயீத் ஜாப்ரி, கிறிஸ்டபர் லீ ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.