நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நடிகர் சங்கத்துக்கென்று கட்டிடம் கட்டுவதற்கு நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு, அந்த நிகழ்வும் நடந்தேறியது. இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி குறித்து விமர்சித்த சிம்பு, நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அவரது இந்த முடிவை பரிசீலனை செய்யச்சொல்லி பல்வேறு தரப்பிலும் சிம்புவுக்கு வற்புறுத்தினர்.
இந்நிலையில், சிம்பு நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறித்து விஷால் பதிலளிக்கும்போது, நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவதாக அறிவித்தது அவருடைய கருத்து. நிர்வாகம் சரியில்லை என்று விலகுவதற்கு நடிகர் சங்கம் என்பது ஒரு கிளப் கிடையாது. எங்களுக்கே இது புதிதாக தெரிகிறது. இருந்தாலும் அவருடைய கருத்தை மதிக்கிறோம். ஆனால், எங்களுடைய மனசாட்சிப்படி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறோம். ஒரு நடிகராக, சகோதரனாக சிம்புவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்’ என்றார்.