90-களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை கவுதமி. பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடிப்பில் வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவுதமிக்கு நடிக்க பல வாய்ப்புகள் வந்தும் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், மோகன்லால் நடிப்பில் மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் உருவாகும் புதிய படத்தில் கவுதமி நடிக்கிறார். இப்படத்திற்கு தமிழில் ‘நமது’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மலையாளத்தில் ‘மனமன்தா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இவர்களுடன் விஸ்வநாத், ஹனிஷா ஆம்ரோஷ், நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடி மாருதி ராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை சந்திரசேகர் ஏலட்டி என்பவர் இயக்குகிறார். இவர் தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். மகேஷ் ஷங்கர் இசையமைக்க, மதன்கார்க்கி வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார். ராகுல் ஸ்ரீவத்சவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை சாய் ஷிவானி வழங்க, வாராஷி சலன சித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. மோகன்லாலும், கவுதமியும் ஏற்கெனவே மலையாளத்தில் நடித்த ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்ல’ என்ற படம் அமோக வெற்றி பெற்றது. இந்த ஜோடி மிகவும் ராசியான ஜோடி என்று கேரளாவில் போற்றப்படுவதுண்டு.