தமிழ் சினிமாவில் தற்போது பேய் சீசன் என்றே சொல்லலாம். தமிழின் முன்னணி நடிகைகள் பலரும் தற்போது பேய் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா ஆகியோர் பேய் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர்.
தற்போது வரலட்சுமியும் இவர்களின் பாணியை பின்பற்றி பேய் படத்தில் நடிக்க முன்வந்துள்ளார். அறிமுக இயக்குனர் ஷங்கர் இயக்கும் அம்மாயி என்ற பேய் படத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளார். இப்படத்தின் நாயகனாக வினய் நடிக்கவுள்ளார். இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில், இசைஞானி இளையராஜா பங்குகொண்டு, படத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இப்படத்தை கே.பி.ஆர் எண்டர்டெய்ன்மென்டஸ் நிறுவனம் சார்பில் கே.பி. ராஜேந்திரன் தயாரிக்கிறார்.
வரலட்சுமி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மதகஜராஜா’ படம் முடிவடைந்தும் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.