ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ படத்தின் ரீலிஸ் தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அந்த படத்தை பற்றிய பல புதிய தகவல்கள் தினமும் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இதுவே, அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் மேலும் அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது.
அதேபோல், இப்படத்திற்காக படக்குழுவினர் எடுத்துவரும் புது புது விளம்பர யுக்திகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. ஏற்கெனவே, இப்படத்தின் ஏர்லைன்ஸ் பார்ட்னராக இணைந்த ஏர்-ஏசியா நிறுவனம் ‘கபாலி’ படத்தின் போஸ்டரை விமானத்தில் ஓட்டி ஆகாயம் வரை இப்படத்தின் புகழை பறைசாற்றி வருகிறது. இந்தியா சினிமாவிலேயே விமானம் ஒன்றில் ஒரு படத்தின் விளம்பரம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்று கூறப்பட்டது.
விமானத்தைத் தொடர்ந்து தற்போது பிரபல வங்கி நிறுவனம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கிரெடிட் கார்டுகளில் ‘கபாலி’ படத்தின் புகைப்படங்களை அச்சடித்து வெளியிட்டு வருகிறது. ‘சிட்டி பேங்க்’ என்ற வங்கிதான் இந்த விளம்பரங்களை செய்து வருகிறது. ஒரு படத்தின் விளம்பரங்கள் கிரெடிட் கார்டில் இடம்பெறுவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.