‘சதிலீலாவதி’, ‘டூயட்’, ‘பஞ்ச தந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரமேஷ் அரவிந்த். இவர் நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் கொண்டவராக திகழ்கிறார். இவர் நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும் கூட.
கன்னட திரையுலகை சேர்ந்த ரமேஷ் அரவிந்த், தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், பாலிவுட் உள்ளிட்ட திரையுலகிலும் தனது தனி முத்திரையை பதித்துள்ளார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’ படத்தை இயக்கியிருந்தார்.
இவருடைய அப்பா நேற்று இரவு திடீரென மரணமடைந்துள்ளார். அவருடைய பிரிவு ரமேஷ் அரவிந்தை ரொம்பவுமே பாதித்துள்ளது. இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய அப்பா நேற்று மரணமடைந்துவிட்டார். அவருடைய கடைசி ஆசையின்படி கண், உடல் தானம் செய்யப்பட்டுள்ளது. நான் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக என்னுடைய அப்பா இருந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.