சீனாவில் பெண்களின் மார்பகங்களை தொடுவதற்காக தன்னை ஒரு தெரு தந்திர வித்தைக்காரர் போல காட்டிக் கொண்ட தனது காணொளியை, வலைப்பூ பதிவர் ஒருவர் பதிவேற்றியதை அடுத்து அந்த நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை அவர் கிளப்பியுள்ளார்.
தன்னை ”க்ரிஸ்” என அழைத்துக் கொள்ளும் அந்த நபர், செங்டு நகரின் மையத்தில் இளம் பெண்களை அணுகுவது போன்று காட்டப்படுகிறார்.
பின், அவர்களிடம் நாணயம் மூலம் வித்தை ஒன்றை காட்டலாமா என கேட்கிறார்.
அவர் பேசி கொண்டிருக்க அருகே நிற்கும் பெண்கள் மிகவும் இயல்பாக இருப்பதைப் போன்று தோன்றுகிறது.
பின்னர், நாணயத்தை எடுத்து பெண்களின் மார்பில் வைத்து அழுத்துகிறார். தொடர்ந்து, மார்பை அழுத்துகிறார்.
உள்ளூர் ஊடகத்திடம் பேசிய கடை உரிமையாளர் ஒருவர், இணையத்தில் இந்த காணொளிகளை கண்டவுடன் பொலிஸாரை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அரசு செய்தி நிறுவனமான தி கவர், ஷு என்ற குடும்ப பெயரை கொண்ட ஷாங்காயை சேர்ந்த ஒரு காணொளி வலைப்பூ பதிவர் என ஊடகங்களில் அடையாளம் காணப்பட்ட நபரை பொலிஸார் கண்டுபிடித்துவிட்டதாகவும், விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அந்த நபரால் பெண்கள் அணுகப்பட்டிருந்தால் தாங்களாக முன்வர வேண்டும் என்று பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
யார் இந்த தந்திர வித்தைக்காரர்?
சினா வெய்போ என்ற சமூக வலைத்தளத்தில் இந்த வலைப்பூ பதிவருக்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்வோர் இருக்கின்றனர்.
அதில், தன்னை இணைய குறும்புக்காரர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து, தெருக்களில் செல்லும் பெண்களை நிறுத்தி அவர்களிடம் எடக்கு மடக்காக தனிப்பட்ட கேள்விகளை கேட்பது போன்று தோன்றும் காணொளிகளை பதிவேற்றி வருகிறார்.
ஒரு காணொளியில், பெண்களிடம், மாதவிடாய் காலத்தில் வெளியேறும் கழிவுகளை உறிஞ்சும் டாம்பன் என்ற மென்மையான பொருளை பயன்படுத்துகிறீர்களா என்றும், உங்களுடன் ஒரு இரவைக் கழிக்கலாமா என்றும் கேட்கிறார்.
பின், அவர்களின் எதிர்வினையை கேமராவில் பதிவு செய்கிறார்.
சமீப காணொளிகளில் அவருடைய நடவடிக்கை அதிக அளவில் அறுவறுப்பு ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த காணொளியில் இடம்பெற்ற பெண்களின் முகங்கள் மறைக்கப்படவில்லை மேலும் பெரும்பாலான காணொளிகள் திறந்த பொதுவெளிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஷு பதிவேற்றிய காணொளிகளுக்கு இணைய பயன்பாட்டாளர்கள் கோபத்துடன் எதிர்வினை இயற்றியுள்ளனர்.
‘ஏன் அமைதியாக இருக்கிறார்கள் ?’
பெண்களின் மார்பகங்களை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடும் வித்தைக்காரர் ஷு குறித்த காணொளி தொகுப்பை தி கவர் இணையதளம் வெளியிட்டிருந்தது.
இதுவரை சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அக்காணொளி ஈர்த்துள்ளது.