இந்தி பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவருக்கு மேக்கப்மேனாக இருப்பவர் ஷான் முட்டத்தில். கேரளாவைச் சேர்ந்த இவர், இந்தி பட உலகில் பிரபலமானவர்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் படத்துக்கு படம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனால் நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது.
இதற்கு காரணமான தனது மேக்கப் மேன் மீது ஜாக்குலின் தனி அக்கறை வைத்திருந்தார். இந்த நிலையில், தனது மேக்கப் மேனுக்கு அவரே எதிர்பார்க்காத பரிசு கொடுத்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். சமீபத்தில் ஷான் பிறந்த நாள் வந்தது. அன்றைய தினம், ஒரு அடுக்கு மாடி வீட்டில் குடியிருக்கும் ஷானை, கீழே வரும்படி ஜாக்குலின் பெர்னாண்டஸ் அழைத்தார். அவர் கீழே வந்ததும், ‘வாழ்த்துக்கள்’ என்று கூறி ஒரு கார் சாவியை ஷானிடம் கொடுத்தார். அருகில் ஒரு எஸ் யு வி கம்பஸ் வகையைச் சேர்ந்த ஜீப் கார் நின்று கொண்டிருந்தது.
‘இது உங்களுக்குத்தான்’ என்று ஜாக்குலின் சொன்னதும் அவருடைய மேக்கப்மேன் ஷான் அசந்து போனார். “இதுவரை வந்த எனது பிறந்த நாளில் இது மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.