நடிகை ஸ்ரேயா தெலுங்கில் தயாரான இஷ்டம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் 2001-ல் வெளிவந்தது. தொடர்ந்து தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழில் ரஜினி ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து பிரபலமானார். விஜய், விக்ரம் ஜோடியாவும் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. கடைசியாக ஜீவா ஜோடியாக ரவுத்திரம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் 2011 ல் வந்தது. அதன் பிறகு அவர் நடிப்பில் தெலுங்கில் வந்த பவித்ரா படமும் கன்னடத்தில் வந்த சந்திரா படமும் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டன. இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரிஷ்யம் படத்தில் அஜய் தேவ்கான் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரேயாவை தெலுங்கு கதாநாயகர்களுடன் இணைத்து கிசு கிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு ஸ்ரேயா தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
கதாநாயகர்களுடன் என்னை தொடர்புபடுத்தி செய்திகள் வருகின்றன, அதில் உண்மை இல்லை. நான் எந்த நடிகரையும் காதலிக்கவில்லை. நிறைய கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது வேறு எந்த உறவும் கிடையாது. எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்வேன். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.