கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் `பேட்ட´. ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
பேட்ட படத்தின் டிரைலர் நேற்று காலை வெளியானது. படத்தில் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்தில் ஸ்டைலாகவும், அதிரடியாகவும் தோன்றுவதால் பேட்ட டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பேட்ட டிரைலர் ரிலீசான சில நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.
12 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் பார்த்தனர். இதுதவிர 5 லட்சத்து 56 ஆயிரம் பேர் டிரைலரை லைக் செய்துள்ளனர். இன்று காலை 24 மணிநேரம் கடந்த நிலையில், பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. நேற்று டுவிட்டரில் உலக அளவில் 6-வது இடத்திலும், இந்தியா அளவில் முதல் இடத்திலும் டிரெண்டாகியுள்ளது.
இது தவிர கெட்ரஜினிபைடு, சூப்பர் ஸ்டார்ரஜினி, பேட்ட பொங்கல் பராக் ஆகிய ஹேஷ்டேக்குகளும் இந்தியா அளவில் டிரெண்டாகி உள்ளன.