மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ப்ரேமம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க சூர்யா மற்றும் தனுஷ் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ப்ரேமம்’. மலையாளத்தில் வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும், இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா மற்றும் தனுஷ் இருவருமே ஆர்வம் காட்டி வருகிறார்கள். ‘ப்ரேமம்’ ரீமேக்கை இயக்க கெளதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், ‘வாரணம் ஆயிரம்’ சாயல் இருப்பதால் ரீமேக்கை இயக்குவதில் இருந்து விலகிவிட்டார். யாரை இயக்க வைக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
பள்ளி காலத்தில் இருந்து கதை ஆரம்பிப்பதால் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
விரைவில் ‘ப்ரேமம்’ ரீமேக்கில் நாயகனாக நடிப்பது யார், இயக்குவது யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக கூடும்.