புற்றுநோயால் பல ஆண்டு காலமாக அவதிப்பட்டு வந்த பேட்மேன் பட இயக்குநர் ஜோயல் ஷுமேக்கர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 80.
ஆலனின் ஸ்லீப்பர் (1973) உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக முதலில் பணியாற்றிய ஜோயல், சில படங்களுக்குக் கதாசிரியராகப் பணியாற்றினார். 1981-ல் தி இண்கிரடிபிள் ஷ்ரிங்கிங் வுமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 1995-ல் பேட்மேன் ஃபோர்எவர், பேட்மேன் ராபின் போன்ற படங்களை இயக்கினார்.
கடைசியாக 2011-ல் டிரெஸ்பாஸ் என்கிற படத்தை இயக்கிய ஜோயல் – செயிண்ட் எல்மோஸ் ஃபயர் (1985), தி லாஸ்ட் பாய்ஸ் (1987), ஃபிளாட்லைனர்ஸ் (1990) போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார். பேட்மேன் படங்களை இயக்கிய பிறகு குறைந்த பட்ஜெட்டில் பல படங்களை இயக்கினார். ஃபாலிங் டவுன் (1993), 8 எம்எம் (1999) ஆகியவை சர்வதேசப் பட விழாக்களில் சிறந்த படங்களுக்கான போட்டிக்குத் தேர்வாகின.
புற்றுநோயால் பல ஆண்டு காலமாக அவதிப்பட்டு வந்த ஜோயல், சிகிச்சை பலனின்றி நேற்று காலமாகியுள்ளார். ஜோயல் ஷுமேக்கரின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.