தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் கங்கனாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஜெயலலிதா, கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.
விஜய் இயக்கி வரும் இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை – ஜி.வி. பிரகாஷ்.
கரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் கங்கனாவின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுபற்றி கங்கனா கூறியதாவது: ஜெயா அம்மாவின் ஆசியால் படப்பிடிப்பின் இன்னொரு பகுதியை முடித்துவிட்டோம். கரோனாவால் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால் ஆக்ஷன் – கட் இவற்றுக்கு இடையே எதுவும் மாறவில்லை. குழுவினருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.