இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், சர்க்கரை பற்றியும், சர்க்கரையினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் தொடர்பாகவும் உலா வரும் கட்டுக்கதைகளை உடைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.
சர்க்கரை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இந்த பிரசாரம் முன்வைக்கப்படுகிறது.
சராசரியாக, இந்தியர்கள் ஓராண்டுக்கு 19 கிலோ சர்க்கரையை உட்கொள்கிறார்கள். இது உலக சராசரியை விட மிகவும் குறைவு. இருப்பினும், இந்தியாதான் உலகிலேயே சர்க்கரையை அதிகமாக நுகரும் நாடு.
இந்த ஆண்டில், இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 13 சதவிகிதம் அதிகரித்து, உற்பத்தி அளவு 31 மில்லியன் டன்னாக உயரலாம். ஆனால் அரசாங்கமோ, உபரியாக இருக்கும் சர்க்கரை கையிருப்புகளை தீர்க்க, சர்க்கரை ஏற்றுமதிக்காக வழங்கும் மானியம் நிறுத்தப்படலாம் என மறைமுகமாகச் சுட்டிக் காட்டி இருக்கிறது.
இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் புதிய வலைதளத்தில் “சாப்பிடுங்கள், பருகுங்கள் மற்றும் ஆரோக்கியமாக இருங்கள்: கொஞ்சம் சர்கரை அத்தனை மோசமல்ல” போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இருக்கின்றன.
இந்த இணைய வழி பிரசாரத்தில் சமூக வலைதள பதிவுகளும், செயல்முறை பயற்சிகளும் அடங்கும். அவற்றில் புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள் மற்றும் உடல் நல பயிற்றுநர்கள் ஆரோக்கியமான வாழ்கையைக் குறித்து விவாதிக்கிறார்கள்.
இந்த வலைதளத்தில் இனிப்புகள் தயாரிப்பதற்கான வழிமுறைகளும் இருக்கின்றன. Artificial sweeteners என்று அழைக்கப்படும் செயற்கை இனிப்புகள், மக்களின் உடல் எடையைக் குறைக்க உதவாது, அதோடு உடல் நலத்தில் பக்க விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனவும் அதில் சொல்லப்படுகிறது.
புதிய வலைதளத்தைத் தொடங்கும் போது, “சர்க்கரை பற்றியும், சர்க்கரையை நுகர்வது பற்றியும் எந்தவொரு அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லாமல், பல கட்டுக்கதைகள் இருக்கின்றன” என, இந்திய உணவுச் செயலர் சுதான்சு பாண்டே, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.