இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான 4 வது டெஸ்ட் திட்டமிட்டபடி பிரிஸ்பேனில் நடைபெறும் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1 – 2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2 – 1 என வென்றது.
டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது அவுஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2 வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3 வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.
சிட்னியின் கடற்கரைப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், அந்நகரம் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்துடனான எல்லையை குயின்ஸ்லாந்து மாகாணம் மூடியுள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் தான் 4 ஆவது டெஸ்ட் நடைபெறுகிறது. குயின்ஸ்லாந்து மாகாணம் விதிக்கும் கரோனா தடுப்பு விதிமுறைகள் மிகக் கடுமையானதாக உள்ளன.
விளையாடும் மற்றும் பயிற்சியில் ஈடுபடும் நேரங்கள் தவிர கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அறையை விட்டு வெளியேற முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இந்திய வீரர்களும் பிசிசிஐயும் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஏற்கெனவே அவுஸ்திரேலியா வந்தவுடனேயே பல நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், தற்போது மீண்டும் மிகக் கடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு உட்படுத்தப்படுவது இந்திய வீரா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் 4 வது டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெறுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் 4 வது டெஸ்ட் திட்டமிட்டபடி பிரிஸ்பேனில் நடைபெறும் என கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
நேற்று, பிசிசிஐ செயலாளரிடம் பேசினேன். பிரிஸ்பேனுக்குப் பயணம் செய்ய இந்திய அணியினர் ஒப்புக்கொள்வதாக அவர் கூறினார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
1988 க்குப் பிறகு பிரிஸ்பேனில் அவுஸ்திரேலிய அணி ஒரு டெஸ்டிலும் தோற்றதில்லை.