மெரில் ஸ்டிரீப், கால் கேடட் ஆகிய நடிகைகளுக்கு இணையாகத் தன்னிடம் திறமைகள் உள்ளதாக நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஜெயலலிதா, கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் தன்னுடைய நடிப்புத் திறமை பற்றி ட்விட்டரில் கங்கனா கூறியுள்ளதாவது:
ஒரு நடிகையாக நான் வெளிப்படுத்தும் வித்தியாசமான திறமைகள் இந்த உலகில் வேறு யாரிடமும் தற்போது இல்லை. பல்வேறு விதமான நடிப்பில் மெரில் ஸ்டிரீப் போலவும் ஆக்ஷன் மற்றும் கவர்ச்சியில் கால் கேடட் போலவும் திறமையை வெளிப்படுத்துகிறேன்.
இந்த உலகில் என்னை விடவும் திரைப்படக் கலையில் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் இன்னொரு நடிகை உண்டா? அப்படிக் காண்பித்தால் என்னுடைய ஆணவத்தை விட்டு விடுகிறேன். அதுவரை நான் பெருமிதத்துடன் இருப்பேன் என்று கூறியுள்ளார்.