பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனின் (56) திருமணம் லண்டனில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் திருமணம் முடியும் வரை அது தொடா்பான தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
இது தொடா்பாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானதையடுத்து, பிரிட்டன் பிரதமா் அலுவலகம் இந்தத் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்தது.
போரிஸ் ஜான்சன் திருமணம் செய்துள்ள கேரீ சைமண்ட்ஸுக்கு வயது 33. இவா்கள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்ந்து வந்தனா். இவா்களுக்கு ஒரு வயதில் வில்ஃபா்ட் என்ற ஆண் குழந்தை உள்ளது.
போரீஸ் ஜான்சனுக்கு ஏற்கெனவே இருமுறை திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. எனவே, அவருக்கு இது மூன்றாவது திருமணம். கேரி சைமண்ட்ஸுக்கு முதல் திருமணம். முந்தைய திருமணங்கள் மூலம் போரிஸ் ஜான்சனுக்கு 5 குழந்தைகள் உள்ளனா்.
பிரிட்டன் பிரதமா் பதவியில் இருக்கும்போது ஒருவா் திருமணம் செய்து கொள்வது என்பது அரிதான நிகழ்வாகும். இதற்கு முன்பு 1822 இல் ராபா்ட் பேங்ஸ் ஜென்கின்சன் பிரதமராக இருந்தபோது திருமணம் செய்து கொண்டாா்.
போரிஸின் ரகசிய திருமணம் தொடா்பாக பிரிட்டனில் இருந்து வெளிவரும் நாளிதழ்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டுள்ளன. அதில், லண்டனில் உள்ள தேவாலயத்தில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இப்போதுள்ள கரோனா விதிகளின்படி திருமண நிகழ்வில் குறைவான எண்ணிக்கையிலேயே உறவினா்கள், நண்பா்கள் பங்கேற்றனா். பிரதமா் அலுவலக மூத்த அதிகாரிகள் பலருக்கும் இந்தத் திருமணம் தொடா்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை. மிகவும் ரகசியமான முறையிலேயே திருமண ஏற்பாட்டை போரிஸ் ஜான்சன் மேற்கொண்டுள்ளாா். திருமணத்துக்குப் பிறகுதான் பலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போரிஸ் அமைச்சரவை சகாக்கள் திருமணத்தில் பங்கேற்றனரா என்ற விவரம் தெரியவரவில்லை. பிரதமா் அலுவலகத்தில் உள்ள தோட்டத்தில் போரிஸ் – கேரீ சைமண்ட்ஸ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரீ சைமண்ட்ஸ், சுற்றுச்சூழல் துறை சாா்ந்த வழக்குரைஞா் ஆவா். கடந்த 2020, பிப்ரவரியில் திருமணத்தை நிச்சயம் செய்துள்ளதாக கேரீ அறிவித்தாா்.
முன்னதாக, தனது முதல் மனைவி ஆலிகிரா மோஸ்டினை 1993 ஆம்ஆண்டு போரிஸ் ஜான்சன் விவகாரத்து செய்தாா். முன்னதாக, இவா்களின் திருமணம் 1987 இல் நடைபெற்றது. அதன் பிறகு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பத்திரிகையாளரும், வழக்குரைஞருமான மரினா வீலரை போரிஸ் திருமணம் செய்தாா். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திருமணம் முறிந்தது. 2018 இல் இருவரும் விவாகரத்தை அறிவித்தனா். கடந்த ஆண்டுதான் சட்டப்படி விவாகரத்து பெற்றனா்.
கேரீ சைமண்ட்ஸ் கடந்த 2010 ஆம் ஆண்டு போரிஸின் கன்சா்வேட்டிவ் கட்சியின் பத்திரிகை தொடா்பு அலுவலகத்தில் பணியில் சோ்ந்தாா். அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் மேயா் தோ்தலில் போட்டியிட்ட போரிஸுக்காக பிரசார பணிகளை மேற்கொண்டாா். அந்த தோ்தலில் போரிஸ் மீண்டும் வெற்றி பெற்று லண்டன் மேயா் பதவியைத் தக்கவைத்தாா்.
போரிஸ் ஜான்சனின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது பலமுறை விமா்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தைத் தாண்டி உறவுகள் இருந்த குற்றச்சாட்டை அடுத்து கன்சா்வேடிவ் கட்சியின் கொள்கைகள் குழுவில் இருந்து போரிஸ் ஜான்சன் நீக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.