அறுபது லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த அச்சமூட்டும், ஒரு அசாதாரணமான வீடியோ பயந்த சுபாவம் உள்ளவர்கள் இதைப் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தலுடன் யூடியூப்பில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவுக்கு செல்பி ப்ரம் ஹெல் ( Selfie from Hell) நரகத்திலிருந்து செல்பி என பெயரிடப்பட்டு உள்ளது. இதனை சுமார் 60 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இது செல்பி குறித்த ஒரு விழிப்புணர்வு வீடியோவாகவும் எடுத்து கொள்ளலாம். இன்றைக்கு ‘செல்பி’ ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே ‘டிஜிட்டல் புற்று நோய்’ போல விரைந்து பரவுகிறது.
ஸ்மார்ட் போன்கள் செல்பி ஆசைக்கு எண்ணை வார்க்கிறது, சமூக வலைத்தளங்கள் அந்த ஆசைக்கு தீமூட்டி விடுகின்றன.
சமூக வலைத்தளங்களில் கண்சிமிட்டும் தமது செல்பிகளுக்கு கிடைக்கும் ‘லைக்’குகளும், பார்வைகளும் இளசுகளை செல்பி எனும் புதை குழிக்குள் தொடர்ந்து இழுத்துகொண்டே இருக்கின்றன.
பொதுஇடங்களில், சுற்றுலாத்தலங்களில், நட்புசார்ந்த சந்திப்புகளில் தொடங்கி, தாம்பத்திய உறவின் புனிதத்தை பேணவேண்டிய படுக்கையறைகள் வரை இந்த செல்பி மோகம் நீண்டுகொண்டே போகின்றது.
செல்போனை கையில் எடுத்து விதவிதமான முகபாவங்களுடன் தங்களை கிளிக்கிக் கொள்ளும் கலாசாரம் எல்லா இடங்களிலும் புற்றீசல் போல புறப்பட்டு விட்டது.
கேமராவில் தன்னைத்தானே போட்டோ எடுப்பதில் என்ன பிரச்சினை? என்பதுதான் பெரும்பாலானவர்களின் மனதில் எழும் கேள்வியாக இருக்கும். ஆனால், அது அத்தனை எளிதில் கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல என்கிறார் உளவியலாளர் டேவிட் வேல்.
தற்போது இந்த விழிப்புணர்வு வீடியோ செல்பி எடுத்து கொள்பவர்களுக்கு பயஅலைகளை ஏற்படுத்தி உள்ளது போல் தோன்றுகின்றது.
இந்த வீடியோவை எர்டால் செய்லான் மற்றும் மேலா ஆடம்ஸ் ஆகியோர் தயாரித்து யூ டியூப்பில் பதிவு செய்துள்ளனர்.
நான் அதிகபடியான குறும்படங்களை தயாரித்து உள்ளேன். ஆனால் இந்த முறை ஒரு புதிதாக ஒன்று செய்ய நினைத்தேன் அது புதியதாகவும் இருக்க வேண்டும். அற்புதமானதாகவும் தயாரிக்க வேண்டும் என எண்ணினேன் என்று மேலா ஆடம்ஸ் கூறியுள்ளார்.
இந்த கற்பனையானது, தி ரிங் மற்றும் இன்சிடிஒயுஸ் ஆகிய சினிமா படங்களில் இருந்து தோன்றியதுதான். ஆனால் மொழி உலகளாவியது. இதில் எந்த வசனமும் இல்லை. எனவே, உலகில் உள்ள அனைவரும் இந்த வீடியோ பதிவு கூறும் செய்தியை புரிந்து கொள்வர்.
உங்களுக்கு புரிகின்றதா.., வீடியோவை கிளிக் செய்த பின் விமர்சிக்கவும்!