யூரோ கால்பந்து ஆட்டத்தில் வலிமை அப்டேட் கோரி ரசிகர்கள் பதாகை ஏந்தியது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
யூரோ கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க், இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு பதாகை ஒன்று மைதானத்தில் பிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, இந்தப் படம் சமூக ஊடகங்களில் வைரலாக தொடங்கியது. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா-நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என பெரிய இடங்களில் ஒலித்து வந்த வலிமை அப்டேட், தற்போது கடல் தாண்டி யூரோ கால்பந்து தொடரையும் எட்டியுள்ளது.
வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் 15 ஆம் திகதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.