ஐபிஎல்-இன் திங்கள்கிழமை ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு 19 ஓவர்கள் முடிவில் 92 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
93 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே துரித ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. இதனால், பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்கள் எடுத்தது.
பெங்களூரு தலைவர் விராட் கோலி பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலன் தரவில்லை.
வெற்றியை நெருங்கியபோது 48 ஓட்டங்கள் எடுத்திருந்த கில் யுஸ்வேந்திர சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால், அதே ஓவரில் வெங்கடேஷ் மூன்று பவுண்டரிகளை விளாச கொல்கத்தா அணி வெற்றி இலக்கை அடைந்தது.
10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்கள் எடுத்த கொல்கத்தா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெங்கடேஷ் 41 ஓட்டங்கள் எடுத்தார்.