‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த ரித்விகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரித்விகா, பாலாவின் ‘பரதேசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தொடர்ந்து சில படங்களில் நடித்தவருக்கு, ‘மெட்ராஸ்’ படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து ‘கபாலி’ படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிட்டியது.
‘கபாலி’ படம் ரித்விகா நடிக்கும் 4-வது படமாகும். தனது நான்காவது படத்திலேயே ரஜினியுடன் இணைந்து நடித்தது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கூறும்போது, ரஜினி சாரும், நானும் இணைந்து நடித்த காட்சிகள் சமீபத்தில் சென்னையில் மூன்று நாட்கள் படமாக்கப்பட்டது.
முதலில், அவர் முன் நடிக்கும்போது எனக்கு பயமாக இருந்தது. ஆனால், அவருடைய எளிமையை பார்த்ததும், அவருடன் நடிப்பதில் ரொம்பவும் சிரமம் இல்லை. படப்பிடிப்பு முடிந்ததும், என்னிடம் நேரில் வந்து என்னுடைய நடிப்பை பாராட்டினார். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. நாம் ரொம்பவும் நெகிழ்ந்துபோனேன். இந்த தருணத்தை என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என்றார்.
‘கபாலி’ படத்தில் ரஜினியுடன், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டக்கத்தி ரஞ்சித் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் படப்பிடிப்பை முடித்த பிறகு அடுத்தக்கட்டமாக படக்குழு மலேசியா செல்லவிருக்கிறது.