அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கிண்ண குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் சூப்பர் 12 சுற்றில் தங்களது கடைசி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய தலைவர் ஆரோ பிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
கிறிஸ் கெயில் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிரடியுடன் இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆனால், 15 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த அவர் பாட் கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன், ராஸ்டன் சேஸ் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
எவின் லீவிஸ் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் சிறிய பாட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். லீவிஸ் 29 ஓட்டங்களுக்கும், ஹெட்மயர் 27 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு களமிறங்கிய தலைவர் கைரன் பொலார்ட் அதிரடி காட்டி ரன் ரேட்டை உயர்த்தினார். 31 பந்துகளில் 44 ஓட்டங்கள் விளாசிய அவர் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
எனினும், ஆண்ட்ரே ரஸல் கடைசி 2 பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பி அதிரடியுடன் இன்னிங்ஸை முடித்தார். 19.5 வது பந்தில் அவர் அடித்த சிக்ஸர் 111 மீட்டர் தூரம் சென்றது குறிப்பிடத்தக்கது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.