அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல மாத இதழ் “பிளே பாய்’. இந்த புத்தகத்தில் பக்கத்துக்குப் பக்கம் நடிகைகளின் நிர்வாணப் படங்கள் தவறாமல் இடம் பெறும். இதில் வெளியாகும் படங்கள் உலகளவில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
பிளேபாய் இதழில் உலகப் புகழ்பெற்ற நடிகைகள், மாடல் அழகிகளின் கவர்ச்சிப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன. இந்த பத்திரிகைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இனி பிளேபாய் இதழில் நிர்வாண படங்கள் பிரசுரிக்க போவது இல்லை என அந்த இதழின் நிர்வாகம் முடிவு எடுத்து உள்ளது.
பிளேபாய் நிறுவனர் ஹியூக் ஹெப்னர்(வயது 89) தலைமை செயலதிகாரி ஸ்காட் பிளான்டர்ஸ் ஆகியோர் இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அடுத்த (2016) ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு நீள (புளோஅப்) நிர்வாணப் படங்கள் பிளேபாய் இதழில் இடம்பெறாது என்ற முடிவை எடுத்துள்ளோம். ஆனால், இந்தமாத அழகி பகுதியும், பெண்களின் கவர்ச்சிப் படங்களும் தொடர்ந்து இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்.
1953-ம் ஆண்டு வெளியான பிளேபாய் முதல் இதழின் அட்டைப்படத்தில் அன்றைய ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் படம் இடம்பெற்றிருந்தது. கடந்த 1975-ம் ஆண்டு நிலவரப்படி, சர்வதேச அளவில் பிளேபாய் இதழின் விற்பனை மாதத்துக்கு சுமார் 50 லட்சம் பிரதிகள் என்ற அளவில் இருந்தது. ஆனால், தற்போது மொத்தமே 8 லட்சம் பிரதிகள் மட்டுமே விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இன்டர்நெட்டில் நிர்வாணப் படங்களுக்கு பஞ்சமே இல்லை. மவுசை கிளிக்கினால் போதும் இலவசமாகவே ஏகப்பட்ட படங்கள் கிடைக்கிறது. எனவே, நிர்வாணம் என்பது இப்போது மிகவும் சாதாரணமாகி விட்டது. இந்நிலையில், பிளேபாய் பத்திரிகையின் பாணியை மாற்றியமைக்க நிர்வாகமும், ஆசிரியர் குழுவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.