உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் பயன்படுத்தக்கூடிய சமூகவலைதளமாக ட்விட்டர் உள்ளது. சொல்ல வந்து கருத்துகளை 280 பாத்திரங்களில் சுருக்கமாக சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ட்விட்டர், மற்ற சமூகவலைதளங்களிலிருந்து மாறுப்பட்டதாக உள்ளது.
இதன் பயனாளர்கள் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டுக்குள் 340 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்களை மேலும் கவரும் வகையில், பல அப்டேட்டுகளை அறிமுகப்படுத்திவருகிறது. அந்த வகையில், யூடியூப், ரெட்டிட்டை போல டிஸ்லைக் வசதியை கொண்டுவருகிறது ட்விட்டர்.
சோதனை முயற்சியாக டவுன்வோட் (டிஸ்லைக்) வசதியை உலகம் முழுவதும் விரிவுப்படுத்துகிறது ட்விட்டர். டிஸ்லைக் பதிவுகளின் அடிப்படையில் பயனாளர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற பதிவுகள் அவர்களுக்கு செல்கிறதா என்பதை சோதனை செய்துவருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சோதனையை உலகளாவிய பார்வையாளர்களுக்கு விரிவுபடுத்தும்போது, நாங்கள் இதுவரை கற்றுக்கொண்டதைப் பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். உங்களுக்குப் பொருத்தமில்லாத பதிவுகளின் வகைகளைப் பற்றி நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்.
மேலும் இந்தச் சோதனையை விரிவுபடுத்துகிறோம். இணைய பயனாளர்களுக்கு அடுத்தபடியாக, விரைவில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும். டிஸ்லைக் செய்வது வெளிப்படையாக மற்றவர்களுக்கு தெரியாது. ஆனால், உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற பதிவுகள் உங்களுக்கு வரும் வகையில் ட்விட்டருக்கு தெரியப்படுத்தும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பேஸ்புக் எமோஜிக்கள் மிகப் பிரபலம். பயனாளர்களை கவரும் வகையில் இதனையும் ட்விட்டர் சோதித்தது.
2020ஆம் ஆண்டு நவம்பரில், டிஸ்லைக் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்துவருகிறோம் என ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார்.