நடிகர் சங்க தேர்தலுக்கு 200 போலீசார் பாதுகாப்பு !

By On · no Comments · In

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்கு சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியினருக்கும், விஷால் தலைமையிலான அணியினருக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

சரத்குமார் அணி சார்பில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ். எஸ்.கண்ணன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 
இவர்கள் தவிர இரு அணி சார்பிலும் உறுப்பினர்கள் பதவிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

 
நடிகர் சங்க தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த வார தொடக்கத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்கு சீட்டு எண்களை (சின்னம்) வெளியிட்டார். இதைத் தொடர்ந்து சரத்குமார் அணியினரும் விஷால் அணியினரும் போட்டி போட்டு ஆதரவு திரட்டினார்கள்.

 
நேற்றும் இன்றும் நடிகர், நடிகைகளின் வீடுகளுக்கு இரு அணியினரும் படையெடுத்தனர். சரத்குமார் அணிக்காக நடிகை ஸ்ரீபிரியா தலைமையில் நடிகர்கள் வீடு, வீடாக சென்றனர்.

 
அது போல விஷால் அணி சார்பில் ரோகிணி, பிரசன்னா, நந்தா, ரமணா ஆகியோர் வீடு, வீடாக சென்றனர். கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி ஆகிய பகுதிகளில்தான் பெரும்பாலான நடிகர், நடிகைகள் இருப்பதால் அந்த பகுதிகளை முற்றுகையிட்டு ஓட்டு வேட்டை நடந்து வருகிறது.

 
நடிகர் சங்க தேர்தலில் மொத்தம் 3139 பேர் ஓட்டு போட தகுதியுள்ள வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1175 பேர் சென்னைக்கு வெளியில் மற்ற மாவட்டங்களில் வசிக்கும் தொழில் முறை நாடக நடிகர் – நடிகைகள் ஆவார்கள்.

 
இவர்களது ஓட்டுக்களைப் பெற கடந்த 2 வாரமாக சரத்குமார் அணியினரும், விஷால் அணியினரும் சேலம், கரூர், மதுரை உள்பட பல மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்தனர். இதையடுத்தே நடிகர் சங்க தேர்தலில் கடும் விறுவிறுப்பு ஏற்பட்டது.

 
நடிகர் சங்க தேர்தலில் தபால் மூலமாகவும், நேரடியாகவும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தபால் மூலம் வாக்களிக்க 934 பேர் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டன.

 
அதில் அவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து தேர்தலை நடத்தும் அதிகாரி பத்மநாபனுக்கு அனுப்பி வைத்து விட்டனர். அந்த தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

 
வெளி மாவட்ட நாடக நடிகர் – நடிகைகளில் 241 பேர் நேரில் வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளனர். அது போல சென்னையில் உள்ள நடிகர், நடிகைகள் 1964 பேர் நேரில் வாக்களிக்க உள்ளனர். அந்த வகையில் நாளை மொத்தம் 2205 பேர் வாக்களிக்க உள்ளனர்.

 
ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயிண்ட் எப்பாஸ் பள்ளியில் செய்யப் பட்டுள்ளது. அந்த பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறை வாக்குச்சாவடியாக மாற்றப் பட்டுள்ளது. ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தங்கள் வாக்கை ரகசியமாகவும், சுதந்திரமாகவும் பதிவு செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். ஒவ்வொரு பதவிக்கும் உரியவர்களின் எண்கள், படங்களுடன் ஓட்டுச் சீட்டு அச்சடித்து தயாராக வைக்கப் பட்டுள்ளது.

 
நடிகர், நடிகைகள் யாரை தேர்வு செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் எண் பகுதியில் டிக் செய்ய வேண்டும். இந்த வாக்குப்பதிவை எப்படி செய்ய வேண்டும் என்று இரு அணியினரும் நேற்றும், இன்றும் விளக்கமாக கூறி வருகிறார்கள்.

 
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் இதுவரை இப்படியொரு போட்டி ஏற்பட்டதில்லை. இரு அணியினரும் வெற்றி பெற தீவிரமாக உள்ளனர். இதன் காரணமாக நாளை ஓட்டுப்பதிவு நடக்கும் மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் தமிழ் திரையுலகமே திரள உள்ளது.

 
ஒரு நடிகரோ அல்லது ஒரு நடிகையோ சாதாரணமாக பொது இடத்துக்கு வந்தாலே கூட்டம் கூடி விடும். எல்லா நடிகர்கள், நடிகைகளும் ஒரே இடத்துக்கு வருகிறார்கள் என்பதால் அவர்களை பார்க்க மக்கள் கூட்டம் திரளும் என்று தெரிகிறது. இது தவிர நடிகர், நடிகைகளின் ஆதரவாளர்கள் கூட்டமும் பள்ளி முன்பு திரள வாய்ப்புள்ளது.

 
இதையடுத்து நடிகர் சங்க தேர்தல் ஓட்டுப்பதிவு அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த சென்னை மாநகர போலீசார் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளனர். கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் ஓட்டுப்பதிவு நடைபெறும் பள்ளிக்கூடம் இன்றிரவு முதல் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது. இன்றிரவு முதல் வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

 
நாளை ஓட்டுப்பதிவு நடக்கும்போது ஒரு இணைக் கமிஷனர், 2 துணைக் கமிஷனர்கள் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பள்ளி வெளிப்பகுதி மற்றும் உள் பகுதகிளில் அவர்கள் நிறுத்தப்படுவார்கள்.

 
நடிகர், நடிகைகளில் பெரும்பாலானவர்கள் காரில்தான் வருவார்கள் என்பதால் எப்பாஸ் பள்ளி வளாகத்தில் கார்களை நிறுத்த விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 150 கார்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகன போக்கு வரத்தை அந்த பகுதியில் ஒழுங்குப் படுத்துவதற்கான ஏற்பாடுகளும் பிரத்யேகமாக செய்யப்பட்டுள்ளன.

 
காரில் வரும் நடிகர் – நடிகைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப் போட வரும் நடிகர் அல்லது நடிகை டிரைவருடன் மட்டுமே அனுமதிக்கப்படுவார். நடிகருடன் வரும் வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

 
ஓட்டுப் போட வருபவர்களை கண்காணிக்க பள்ளி வளாகம் முழுவதும் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பள்ளிக்கு வெளியில் திரளும் ரசிகர்களின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும்.

 
ஓட்டுப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் –நடிகைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல தனி, தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை மற்றவர்கள் நெருங்காமல் இருக்க தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளன.

 
ஓட்டுப்பெட்டி அருகில் செல்லும்போது வாக்களிப்பவரை தவிர வேறு யாரும் அருகில் இல்லாதபடி இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னணி நடிகர், நடிகைகள் வாக்களிப்பதை சற்றுத் தொலைவில் இருந்து படம் பிடிக்க பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 
அது போல ஓட்டு போட்டு விட்டு வரும் நடிகர், நடிகைகளிடம் கருத்து கேட்க பத்திரிகையாளர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நின்று நடிகர் – நடிகைகள் பேட்டியளிக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 
ஓட்டுப் போட வரும் நடிகர் – நடிகைகள் கண்டிப்பாக தங்களது நடிகர் சங்க அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க அடையாள அட்டையை தொலைத்து விட்டவர்கள் உரிய அடையாள அட்டையை காட்டி வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
ஓட்டுப்பதிவு நடக்கும் பகுதியில் இது வரை போக்குவரத்து மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொது மக்களுக்கு எந்தவித அசவுகரியமும், இடையூறும் இல்லாதபடி ஓட்டுப்பதிவு நடத்தப்படும்’’ என்றார்.

 
நாளை மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் சிறிது நேரம் கழித்து ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.

 
பிறகு நேரடி ஓட்டுப்பதிவில் போடப்பட்டுள்ள ஓட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர்களின் ஓட்டுகள் தனி தனியாக கணக்கிடப்படும். எனவே முடிவுகள் அதிகாரப்பூர்வமாக தெரிய சில மணி நேரங்கள் பிடிக்கும்.

 
முதலில் தலைவர், துணைத் தலைவர்கள், பொருளாளர் பதவிக்கு நிற்பவர்களில் யார் வெற்றி பெற்றனர் என்ற முடிவு தெரிய வரும். அவர்கள் பெற்ற ஓட்டுகள் விபரமும் அறிவிக்கப்படும். அவர்களைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் முடிவு தெரிய வரும். எனவே நாளை இரவு தமிழ் திரையுலகமே பரபரப்பாக காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 %
Tweet This