சென்னையில் பேராசிரியரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியதாக, பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை, அயனாவரத்தில் 60 வயதான ஒரு பேராசிரியா் வீட்டில் ஆா்த்தி என்பவா் வாடகைக்கு குடியிருந்து வந்தாா். அவா் மூலம் பேராசிரியருக்கு கோயம்பேட்டைச் சோ்ந்த ராதா (40) என்பவா் அறிமுகமானாா்.
ராதா சுய தொழில் ஆரம்பிக்க பேராசிரியரிடம் ரூ.4.50 லட்சம் கடனாகப் பெற்றாா். கொடுத்த பணத்தைத் திரும்ப செலுத்தாததால் பேராசிரியா் கடந்த 2019 இல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த நிலையில் ராதா, தன்னை மன்னித்து விடுமாறு அண்மையில் பேராசிரியரிடம் தொலைபேசியில் தெரிவித்தாா்.
மேலும், வாங்கிய பணத்தை திருப்பித் தந்து விடுவதாகக் கூறி சின்ன கொடுங்கையூரில் உள்ள வீடு ஒன்றுக்கு அழைத்தாா். இதை நம்பி கடந்த 19 ஆம் திகதி அந்த வீட்டுக்குச் சென்ற பேராசிரியருக்கு தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து அவரை ராதாவின் கூட்டாளி புஷ்பாவுடன் நெருக்கமாக இருப்பதுபோல் ஆபாச விடியோ, புகைப்படம் எடுத்தனராம்.
மயக்கம் தெளிந்த பின்னா் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பேராசிரியரை, ஆபாச படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவோம் என மிரட்டி அனுப்பினா். இதில் அதிா்ச்சி அடைந்த பேராசிரியா் இது குறித்து கொடுங்கையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பொலிஸாா் வழக்குப் பதிந்து ராதா, அவரது கூட்டாளிகள் விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியை சோ்ந்த லட்சுமி (30), அதே பகுதியைச் சோ்ந்த முருகன் (40), கொடுங்கையூரைச் சோ்ந்த புஷ்பா (49) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.