வெற்றிகரமாக 15-வது ஆண்டை நிறைவு செய்த சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி தகவல்கள் அடங்கிய மியூசிக்கல் வீடியோவை நாசா வெளியிட்டு கொண்டாடியுள்ளது.
2000ம் ஆண்டு நவம்பர் 2-ல் தான் முதல் முதலில் பில் ஷெப்பர்ட், யூரி மற்றும் செர்ஜி ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையம் பல்வேறு நாடுகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு, பூமியை சுற்றிவரும்படி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் வீரர்கள் அங்கு தங்கி உயிரியல், இயற்பியல், வானவியல், வானிலை மற்றும் பிற துறைகளில் சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுவரை 17 நாடுகளை சேர்ந்த 220 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் சென்று வசித்துள்ளார்கள். சர்வதேச விண்வெளி நிலையம் இதுவரை பூமியை 87,600 முறை சுற்றிவந்துள்ளது. இன்று உள்ள விண்வெளி நிலையம் ஒரு கால்பந்து மைதானத்தின் அளவிற்கு சமமானது. உள்பகுதியில் படுக்கை அறையுடன் கூடிய 6 வீடுகள் அளவிற்கு மனிதர்கள் வசிப்பதற்கான இடம் உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம் வரும் 2028-ம் ஆண்டுவரை செயல்பாட்டில் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
நாசா வெளியிட்டுள்ள இந்த மியூசிக்கல் வீடியோவில், சர்வதேச விண்வெளி நிலையம் பற்றிய தகவல்களை அனிமேஷன் பாடல் மூலம் சுவாரசியமாக கூறப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.