நடந்தால் உடல் எடை குறைவதோடு பணமும் கிடைத்தால் எப்படி இருக்கும்? வேறு வேலை ஏதும் செய்யாமல் நடந்து மட்டுமே காசு ஈட்டும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இது காகிதப் பணமாகவோ அல்லது நாணயமாகவோ கிடைக்காது. டிஜிட்டல் பணமாகவே அது கிடைக்கும்.
பிட் வாக்கிங் டாலர் என பெயரிடப்பட்டுள்ள டிஜிட்டல் பணத்தை ஈட்ட செய்ய வேண்டியதெல்லம் ஒன்றுதான்-நடப்பது.
நடந்து நடந்து இந்த இ-பணத்தை ஈட்டுவதற்கு முன்னர் செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது. அது நமது மொபைல் ஃபோனில் அந்தத் திட்டத்துக்கான செயலியை தரவிறக்கம் செய்வது.
இந்தச் செயலியானது நாம் நடப்பதை அளக்கும். 10,000 அடிகள் நடந்தால் ஒரு பிட்வாக்கிங் டாலரை சம்பாதிக்கலாம்.
அதாவது சராசரியாக ஐந்து மைலுக்கு ஒரு பிட் வாக்கிங் டாலர் கிடைக்கும். இப்படிச் சம்பாதிக்கும் பணத்தை இதற்கென உள்ள ஆன்லைன் கடைகளில் பொருட்களை வாங்க பயன்படுத்தலாம்.
நிஸான் பஹர், ஃப்ராங்கி இம்பெசி ஆகிய இருவரும் இணைந்து இந்த பணத்த உருவாக்கியுள்ளனர்.
இந்தத் திட்டத்திற்கென சுமார் 10 மில்லியன் டாலர்கள் இதுவரை திரட்டப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டாளர்களே இதில் முதலீடு செய்துள்ளனர்.
ஜப்பானின் மின்னணு நிறுவனமான முரடா, இதற்கென கையில் அணிந்துகொள்ளக்கூடிய பட்டை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஸ்மார்ட் ஃபோனுக்குப் பதிலாக இந்தப் பட்டையை அணிந்துகொண்டும் நடக்கலாம்.
இந்தத் திட்டத்தின் நிறுவனர்கள், வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை ஏற்கனவே உருவாக்கியவர்கள்.
கடந்த ஆண்டு, கென்யாவின் நைரோபியில், கம்ப்யூட்டரைப் போலச் செயல்படக்கூடிய கீபோட் என்று அழைக்கப்படும் சிறிய ஸ்டிக் ஒன்றை 7 டாலர்களுக்கு விற்கக்கூடிய வகையில் உருவாக்கினர்.
பலரும் நடக்கும்போது தாம் நடக்கும் தூரத்தை அளக்கக்கூடிய கருவிகளைப் பயன்படுத்துவதை பார்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஊழியர்கள் நடப்பதின் மூலம் சம்பாதிக்கும் தொகையை அவர்கள் வாங்கும் சம்பளத்துடன் அளித்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
வளர்ந்த நாடுகளைப் பொறுத்தவரை, சராசரியாக ஒரு மனிதர் மாதத்திற்கு 15 பிட்வாக்கிங் டாலரை சம்பாதிக்க முடியுமெனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஆனால், ஏழை நாடுகளில் மக்கள் வேலைக்கும் பள்ளிக்கூடத்திற்கும், ஏன் தண்ணீர் சேகரிக்கக்கூட நீண்ட தூரம் நடக்க வேண்டியிருப்பதால், இந்தத் திட்டம் அவர்கள் வாழ்க்கையை மாற்றும் என நம்பப்படுகிறது.
ஆனால், ஒரே இடத்தில் இருந்தபடியே நடப்பது போலச் செய்து ஏமாற்ற முடியாது. கூகுள் மேப் மூலம் ஒருவர் நடந்துசெல்லும் தூரமும் கணக்கிடப்படும்.
ஒரு நாளைக்கு ஒருவர் அதிகபட்சமாக 3 பிட் வாக்கிங் டாலர் மட்டுமே சம்பாதிக்க முடியும்.
தங்கள் ஊழியர்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென விரும்பும் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளும் என இதன் நிறுவனர்கள் நம்புகின்றனர்.