முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்ற கேள்விக்குத்தான் இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பெரிய முட்டைக்குள் ஒரு சின்ன முட்டை இருந்ததற்கான விளக்கம் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் பத்தொன்பது கோழிகளை வளர்த்துவரும் தம்பதியர், பெரும்பாலான முட்டைகளை அக்கப்பக்கத்தினரிடம் விற்றுவிடுவர். ஆனாலும், வீட்டில் எப்போதுமே முட்டை மிஞ்சும்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஒரு முட்டையின் அளவு இயல்பை விட பெரியதாக இருந்தது. இதையெடுத்து ‘ஆஃப் பாயில்’ போட அந்தப் பெரிய முட்டையை உடைத்தனர். அந்த முட்டைக்குள் மஞ்சள் கருவின் அளவு கூட இல்லாத உருளையான முட்டை தோலுடன் இருந்தது.
அந்த சின்ன முட்டைக்குள் என்னதான் இருக்கின்றது எனப் பார்க்கும் ஆர்வத்தில் அதையும் உடைத்தனர். மஞ்சள் கரு இல்லாத வெறும் வெள்ளைக் கருவுடன் இருந்தது.
பொதுவாக, 16 முதல் 26 மணிநேரத்துக்கு ஒருமுறை கோழியின் உடலில் முட்டை செல் உருவாகும். இது கரு முட்டைக் குழாய் வழியே பயணிக்கும்போது, முழுமையான முட்டையாக மாறுகின்றது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் புதிய முட்டை செல் உருவானால் அது ஏற்கனவே உருவாகியுள்ள முட்டைக்குள்ளேயே சென்று விடும்.
சில சமயங்களில் கோழி அதிர்ச்சிக்குள்ளானாலும், இதுபோல நிகழலாம் எனத் தெரியவந்துள்ளது.