நடிகர் – ரவிதேஜா
நடிகை – ஸ்ருதி ஹாசன்
இயக்குனர் – கோபிசந்த் மலினேனி
இசை – தமன் எஸ்
ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு
போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் ரவி தேஜா நாயகி ஸ்ருதிஹாசனை காதலித்து திருமணம் செய்துகொண்டு குழந்தையுடன் வாழ்ந்துவருகிறார். இதே ஊரில் பெரிய தாதாவாக இருக்கிறார் சமுத்திரகனி. இவர் தனது ஒரே மகளை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார்.
இந்நிலையில் தனது மகளை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காதலிப்பதை அறிந்த சமுத்திரக்கனி அவரை கொலை செய்து விடுகிறார். போலீசை கொலை செய்த சமுத்திரக்கனிக்கு எதிராக களம் இறங்குகிறார் ரவி தேஜா.
இறுதியில் சமுத்திரக்கனிக்கு ரவிதேஜா தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரவிதேஜா, போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆக்ஷன் ரொமான்ஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார். இவருக்கான திருப்பம் ரசிக்கும்படி உள்ளது.
தாதாவாக வரும் சமுத்திரகனி தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு வலது கையாக வரும் வரலட்சுமி சரத்குமார் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி, வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
தாதா – போலீஸ் இடையேயான ஆக்சனை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கோபிசந்த் மலினேனி. தெலுங்கில் உருவான இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. கிளைக்கதைகள் திருப்பங்கள் என திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவும் தமனின் இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘க்ராக்’ ஆக்ஷன் விருந்து.