2021 ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 2021 ஐ ஆட்சி செய்திருக்கிறார். 29 ஆட்டங்களில் விளையாடிய ரிஸ்வான் 1,326 ஓட்டங்களைக் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 73.66. ஸ்டிரைக் ரேட் 134.89. துடுப்பாட்டம் மட்டுமில்லாது கீப்பிங்கிலும் ரிஸ்வான் அசத்தியுள்ளார்.
சிறப்பான ஆட்டத்தின்மூலம் 2021 இன் டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார் ரிஸ்வான். அதில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 3 வது இடம் பிடித்தார்.
2021 தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக லாகூரில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இதன்பிறகு, கராச்சியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 87 ஓட்டங்கள் விளாசினார். டி20 உலகக் கிண்ணத்தில் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 79 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
நிகழாண்டில் ஒரு டி20 உலகக் கிண்ணம் வரவுள்ள நிலையில், ரிஸ்வான் இதே ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பது பாகிஸ்தானின் விருப்பமாக இருக்கும்.