சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில் கலந்துரையாடுவதற்கு தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அறிவித்துள்ளார்.
அதற்கமைய, நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய சவாலை வெற்றி கொள்வதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கும் பெறுமதியான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று 5 நாளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு கோரியும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.