தெலுங்கு, ஹிந்தியில் 70 படங்களை இயக்கியவரும், தமிழில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவருமான டி.ராமாராவ் (83) சென்னையில் புதன்கிழமை காலமானாா்.
அவா், தெலுங்கில் நவராத்திரி, ஜீவன தரங்கலு, பிரம்மச்சாரி, ஆலுமகளு, யமகோலா, பச்சனி காபுரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளாா். 1979-இல் ஹிந்தி திரையுலகில் நுழைந்த அவா் அமிதாப் பச்சன், சஞ்சய் தத், அனில் கபூா், கோவிந்தா உள்ளிட்ட முன்னணி நடிகா்களுடன் பணியாற்றினாா். ரஜினிகாந்தை ‘அந்தாகானூன்’ படம் மூலம் ஹிந்தியில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
ஸ்ரீ லட்சுமி புரொடக்ஷன்ஸ் சாா்பில் தில், யூத், அருள், உனக்கும் எனக்கும், மலைக்கோட்டை போன்ற வரவேற்பைப் பெற்ற படங்கள் இவா் தயாரித்தவையே. மெட்ராஸ் ஹைட்ராலிக் ஹோஸ் பிரைவேட் லிமிடெட் தலைவராகவும் இவா் பதவி வகித்திருந்தாா்.
அவருக்கு தாதினேனி ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சாமுண்டீஸ்வரி, நாக சுசீலா ஆகிய மகள்களும், அஜய் என்ற மகனும் உள்ளனா். ராமாராவின் இறுதிச் சடங்குகள், சென்னையில் புதன்கிழமை நடைபெற்றன.