பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் தமிழில் கமல்ஹாசன் ஜோடியாக ‘இந்தியன்’ படத்தில் நடித்தார். இந்த படம் 1996-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் ‘அக்கடானு நாங்க உடை போட்டாதுக்கடானு நீங்க எடை போட்ட தடா… உனக்கு தடா.’ என்ற பாடலை பாடி அவர் ஆடிய நடன காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
தமிழ், மலையாளத்தில் வந்த ‘சாணக்யன்’ என்ற படத்திலும் கமல்ஹாசனுடன் நடித்து இருந்தார். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ஊர்மிளா நடித்த ‘ரங்கீலா’ இந்தி படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளியது.
தற்போது ஊர்மிளாவுக்கு 42 வயது ஆகிறது. சமீபகாலமாக டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் ஊர்மிளாவுக்கும் காஷ்மீரை சேர்ந்த தொழில் அதிபர் மொஹ்சின் அக்தர் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.
மொஹ்சின் அக்தர், ஊர்மிளாவை விட 10 வயது குறைந்தவர். இந்தி படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து இருக்கிறார். மும்பையில் மாடலிங்கும் செய்து வருகிறார்.
இருவரும் மும்பையில் திடீர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை.