‘ரோஜா’ படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.
‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார்.
இவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் சினிமா தயாரிப்பிலும் இறங்கப் போவதாக முன்னர் உறுதிப்படுத்த இயலாத தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் இயக்கத்தில் ‘99 பாடல்கள்’ ( ’99 songs’) என்ற படத்தை அவர் விரைவில் தயாரிக்கவுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹிமான் பட் மற்றும் டென்சிங் டாலா ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகும் இப்படத்துக்கான ஆயத்த ஏற்பாடுகள் சென்னையில் நடந்து வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.