கொஞ்சம் பொறுப்பான பையன், அதீத சீரியஸ் இப்படி கல்யாணம் முதல் காதல் வரை அமித் பார்கவ்க்கு கொஞ்சம் ரசிகர்கள் அதிகம்.
ஹெல்லோ அமித், நீங்க லா படிச்சிருக்கீங்களாமே?
”ஆமா!… சொந்த ஊரு பெங்களூரு, பிறந்தது மட்டும் மைசூர். அம்மா , அப்பா, அண்ணா ரொம்ப குட்டியான, ஜாலியான ஃபேமிலி, லா படிச்சுட்டு அடுத்து என்ன அப்படின்னு யோசிக்கும் போதே எனக்கு தமிழ் சினிமா மேல ஒருவிதமான காதல்னு கூட சொல்லலாம். அப்படி ஒரு ஈர்ப்பு. நடிகனா மாறினா இங்கதான் நடிகனாகணும்னு ஒரு வெறியோட வந்தேன். கன்னடத்துல இராமாயணம் சீரியல் பண்ணேன் அதுல நான் தான் ராமனா நடிச்சேன்.அப்பறம் இப்போ தமிழ் சினிமா , டிவி தான்!”
உலகத்துல எத்தனையோ மொழி சினிமாக்கள் இருந்தும் நீங்க ஏன் தமிழ் மொழிய தேர்ந்தெடுத்தீங்க?
“ அதுக்குக் காரணம் தமிழ் சினிமாக்கள். நிறைய படங்கள் பாலிவுட் தாண்டி, கன்னடம் தாண்டி ரொம்ப நல்ல படங்கள் தமிழ்ல தான் குடுக்கறாங்க. சொல்லப்போனா, தமிழ் சினிமாக்கள் தான் ஒரு வடிவமைப்போட இருக்கு. தமிழ் சினிமா நடிக்க மட்டும் இல்ல, தமிழ் பேசணும்ங்கற ஆசையையும் கூட குடுத்துச்சு. நான் 2012ல தான் தமிழ் நாட்டுக்கே வந்தேன். ரொம்ப ஆர்வமா தமிழ் கத்துக்கிட்டேன். இப்போ எழுத, படிக்கக் கூடத் தெரியும், நினைச்சாலே பெருமையா இருக்கு!”
சென்னை எப்படி இருக்கு?
” சென்னை வந்தா செம பிஸியா, கொஞ்சம் நேரம் கூட சும்மா இருக்கக் கூடாதுன்னு கனவுகளோட வந்தேன். அது இப்போ வரைக்கும் நினைச்ச மாதிரியே நடந்துகிட்டு இருக்கு. அப்பப்போ சின்னச் சின்ன ரோல் சினிமாக்கள்ல பண்றேன். 2 ஸ்டேட்ஸ், என்னை அறிந்தால், என்னமோ ஏதோ, மிருதன் இப்படி. அப்பறம் விஜய் டிவி சீரியல்!”
சீரியல் சின்னத்திரை இந்த வாழ்க்கை எப்படி இருக்கு?
“ சத்தியமா என்னால நம்பவே முடியாத ஒரு ரீச். ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மலேசியா இப்படி உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் சீரியல் பேரெல்லாம் சொல்லி, என்னோட கேரக்டர் பேரெல்லாம் சொல்லி பாராட்டுறாங்க.. சான்ஸே இல்ல. உண்மைய சொன்னா. சீரியல் அப்படின்ன உடனே முதல்ல யோசிச்சேன். இப்போ நல்லவேளை ஒத்துக்கிட்டேன்னு தோணுது!”
பிடிச்ச ஹீரோ, ஹீரோயின் ?
”கமல் சார், ஸ்ரீதேவி, என்ன ஒரு ஜோடி அவங்க. இப்போ விஜய் சேதுபதி, ஹீரோயின் பார்வதி, அவங்க நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்!”
அப்பறம் விரைவில் உங்களுக்குத் திருமணம்னு கேள்விப்பட்டோமே?
“ ஆமா… அவங்க பேரு ஸ்ரீரஞ்சனி. திருநெல்வேலிக்காரங்க… எங்க காதலுக்கு எந்த வித பிரச்னையும் இல்லாம, நாங்களே என்ன இவ்ளோ சுமூகமா முடிஞ்சுடுச்சுன்னு நெனக்கற ரேஞ்சுக்கு உடனே ஒத்துக்கிட்டாங்க!”
யாரு காதல முதல்ல சொன்னீங்க?
” ‘ஐ லவ் யூ’னு நாங்க சொல்லிக்கவே இல்ல, ரெண்டு பேருக்குமே புரிஞ்சது,ஆனா எங்க எப்படி சொல்லிக்கிட்டோம்னு இப்ப வரைக்கும் தெரியவே இல்லைங்கறதுதான் உண்மை. அவங்க செம ஸ்மார்ட். எல்லார் கிட்டயும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா, ஜாலியா பேசுவாங்க. நான் அப்படியே எதிர்மறையான ஆளு. க்ரியேட்டிவ்வா வேலை செய்வாங்க. ரெண்டு பேருமே மீடியா அதனால எங்களுக்குள்ள பொஸஸ்ஸிவ் காரணமான சண்டை வராது!”
கல்யாணம் எப்போ? கல்யாணத்துக்கு அப்பறம் உங்க கெட்ட பழக்கம் எதையாவது விடணும்னு ஐடியா இருக்கா?
“ கல்யாணம் ஜூன் மாசம். ரெண்டு பேருமே பிராமின்ங்கறதுனால சம்பிரதாய முறைகள்ல பெரிசா வித்யாசமில்லாம சாதாரண பிராமின் ஸ்டைல் கல்யாணம். பெங்களூருல ஒரு ரிசெப்ஷன் இருக்கும். ஆங்… என் கிட்ட விடற அளவுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. தண்ணி தம்மு எதும் கிடையாது. இன்னொன்னு ஸ்ரீ கூட இருந்தாலே நான் ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவேன். ரெண்டு பேருக்கும் குடும்பம் தான் ஸ்பெஷல்.அதனால செம ஹேப்பி!”
கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சு… இருந்தாலும் நாங்க சும்மா விட மாட்டோம் உங்க பழைய புரபோசல்கள் பத்தி சொல்லுங்களேன்?
“ ஹா..ஹா… நிறைய வந்துருக்கு. ஆனா ஒரு தடவ ஒரு பொண்ணு ரத்தத்துல என்னோட பேரெழுதி ஃபேஸ்புக் இன்பாக்ஸ்ல போட்ருந்தாங்க. நான் ஷாக் ஆகிட்டேன். அப்பறம் அவங்களுக்கு அட்வைஸ் பண்ணி, எஸ்கேப் ஆகறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு!”
சீரியல் நடிகர்கள் விஜே ஆகுறாங்களே? உங்களுக்கு ஆர்வம் இல்லையா?
“ என் தமிழ் இருக்கற நிலமைக்கு இது வேறயா… எனக்கு மொழி ஃப்ளோ வராது. ஆனாலும் எனக்கு கோபி அண்ணா, பாவனா ரெண்டு பேரோட ஹோஸ்டிங் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ஜெனியூனா இருக்கும். அவங்கள மாதிரி முதல்ல பேச கத்துக்கறேன் அப்பறம் விஜே பத்தி யோசிக்கலாம்!”
சூப்பர் சீரியல் அதுவும் நீங்க எதிர்பார்த்த டைம்ல, அதே சமயம் ஒரு படம் வருது எதுக்கு ஓகே சொல்லுவீங்க?
“கண்டிப்பா சினிமா தான். அதுக்குத்தான போராடிக்கிட்டு இருக்கோம். சான்ஸ விட முடியுமா!”
சென்னைல பிடிச்ச இடம் எது?
“ நிறைய நினைவுகளோட இப்பவும் எப்பவும் என்னை இழுக்கற இடம் பெசன்ட் நகர் பீச். நிறைய ரொமாண்டிக் கதைகள் இருக்கு. ஸ்ரீக்கும் ரொம்பப் பிடிச்ச இடம் பெசண்ட் நகர் பீச் தான்!”