தமிழக சட்டசபை தேர்தல் மே 16–ந்தேதி நடை பெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து விட்டதால் வாகன சோதனை உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகளும் தீவிரமாக உள்ளன.
நேர்மையாக தேர்தல் நடப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி கூறி இருக்கிறார். தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களும் நடந்து வருகின்றன.
ஓட்டுரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறக்கூடாது போன்றவற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விழிப்புணர்வு குறும்படங்களையும் தேர்தல் கமிஷன் தயாராகிறது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படாது. ஒரு குறும்படத்துக்கு தேர்தல் கமிஷன் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்கிறது. இந்த தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களில் நடிக்க ரஜினி, கமல், சூர்யா, நயன்தாரா ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து இருந்தது.
இதில் சூர்யா ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்து விட்டார். அது விரைவில் வெளியாக இருக்கிறது. ரஜினியிடம் இருந்து உடனடியாக ஒப்புதல் கிடைக்கவில்லை. இப்போது தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு படத்தில் நடிக்க வரும்படி ரஜினிக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
இதுதவிர நயன்தாராவும் தேர்தல் விழிப்புணர்வு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். பிரபல நடிகர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.