ரியோ ஒலிம்பிக் தொடர் 5 ஆம் திகதி தொடங்கியது. நேற்றுமுதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு போட்டிகளின் தகுதிச் சுற்றுக்கிடையில் ஜிம்னாஸ்டிக் தகுதிச் சுற்றும் நடைபெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் அணி சார்பில் சமிர் எய்ட் சையித் கலந்து கொண்டார்.
இவரது சுற்று வரும்பொது துள்ளிக் குதித்து சென்று கொண்டிருந்தார். கடைசியாக டைவிங் செய்து தரையில் நிற்கும்போது அவரது இடது கால் சரியாக தரையில் பதியாமல் நிலைதடுமாறி போனார். இதில் அவரது இடது கால் உடைந்தது. இதனால் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் சக நாட்டு வீரர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக மருத்துவக்குழு விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமிர் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்றவர். ஏற்கனவே 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு தொடரிலும் இதுபோன்று காயத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரான்ஸ் ஜிம்னாஸ்டிக் அணியின் தலைவர் கொரின் மௌஸ்டார்ட்-காலோன் கூறுகையில் ‘‘இது எப்படி நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. தற்போது அவர் முருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் இன்னும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்’’ என்றார்.