சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் பாலிவுட் படம், ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா(Lipstic Under My Burkha)’. வெவ்வேறு வயதுகளில் இருக்கும் நான்கு பெண்கள், அவர்களின் பாலியல் விருப்பங்கள், ஏக்கங்கள், வெறுப்புகளைப் பற்றிப் பேசும் திரைக்கதையால், சென்ஸார் போர்டு சான்றிதழ் பெற பல போராட்டங்களைக் கடந்து இறுதியில் திரைக்கு வந்திருக்கும் படம்.
நான்கு நாயகிகளுடனும் அறிமுகம் ஆவோம்.
ஷிரீனுக்கு (கொன்கனா சென்) பல போராட்டங்களுக்குப் பின் பணியில் பதவி உயர்வு கிடைக்கிறது. அந்த சந்தோஷத்தைக்கூடக் கொண்டாடவிடாமல் அவளை நெருக்குகிறது வீட்டுக்குள் அவள் வாழும் நரக வாழ்க்கை. தன் கோபத்தைக்கூட பாலியல் உறவு மூலம் வெளிப்படுத்தும் அவளது கணவனிடம், தன்னுடைய பதவி உயர்வு சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் சூழல் அவளுக்கு இல்லை.
கல்லூரி செல்லும் இஸ்லாமியப் பெண் ரெஹானாவுக்கு (ப்ளாபிடா) பாப் பாடகி மைலி சைரஸ் போல் மேடை ஏறி பாடவேண்டும் என்று ஆசை. ஆனால், அவள் புர்காவோடே எந்நேரமும் இருக்க வேண்டும் என்பது அவள் பெற்றோரின் கட்டளை.
லீலாவுக்கு (அஹானா) அன்று நிச்சயதார்த்தம். அவளைப் படம்பிடித்துக்கொண்டிருக்கிறான் அவளுடைய காதலன். அப்போது கரன்ட் கட்டாக, அவனுடன் பாலுறவு கொள்கிறாள். அதனைக் கண்ட அவள் தாய் அவளை அடித்து, களைந்திருக்கும் அவளை மீண்டும் மணப்பெண்ணாக அலங்கரிக்க, அவள் தன் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறாள்.
நான்காவது பெண், 50 வயதைத் தாண்டிய உஷா (ரத்னா). கணவர் இறந்த பின் தன் சொந்த முயற்சியில் இனிப்புக்கடை வைத்து முன்னேறியவர். தனது பாலியல் தேவைகளை பூர்த்திசெய்யும் வடிகாலாக அவர் செக்ஸ் புத்தகங்களை, ஆன்மிக புத்தகங்களில் மறைத்துவைத்துப் படிக்கிறார். அவர் வாழ்வில் ஓர் ஆண் வருகிறான்.
இந்த நான்கு கதாபாத்திரங்களுடன் மற்றோரு கதாபாத்திரமாய் அவர்களுடன் பயணிக்கிறது… லிப்ஸ்டிக்! தாங்கள் சுதந்திரமாக உணரும்போதும், சமுதாய நெருக்கடிகளை சந்திக்கும்போதும் இந்தப் பெண்கள் லிப்ஸ்டிக் பூசிக்கொள்கின்றனர். அது அவர்களுக்கு விலங்கை உடைக்கும் ஓர் உணர்வைத் தருகிறது.