2008 ஆம் ஆண்டு பாஃப்தா விருது பெற்ற பின்னர், லண்டன் ஹோட்டல் அறையில் ஹார்வி வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக நார்வே நடிகையும், மாடல் அழகியுமான நட்டாஸியா மால்தி தெரிவித்திருக்கிறார்.
விருது வழங்கிய நிகழ்ச்சிக்கு பின்னர் நடைபெற்ற விருந்தில் வைன்ஸ்டீனை சந்தித்ததாகவும், சான்டர்சன் ஹோட்டலில், தான் தங்கியிருக்கின்ற தகவலை சொல்லுவதற்கு அழுத்தம் வழங்கப்பட்டதாவும் நியூ யார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நட்டாஸியா மால்தி தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய அறை கதவை வைன்ஸ்டீன் பலமாக தட்டியதால், மால்தி அவரை உள்ளே அனுமதித்ததாகவும், அவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் மால்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பரஸ்பர சம்மதம் இல்லாத பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக வைன்ஸ்டீன் முன்னதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘திஸ் மீன்ஸ் வோர் எலாங்சைடு ரீஸ் விதர்ஸ்பூன்’, ‘டாம் ஹார்டி அன்ட் கிரிஸ் பின்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள மால்தி, தன்னுடைய அறை கதவை மீண்டும் மீண்டும் பலமாக வைன்ஸ்டீன் தட்டியபோது, தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
“கதவை திற நட்டாஸியா மால்தி. நான் ஹார்வி வைன்ஸ்டீன்” என்று யாரோ கத்துவது கேட்டது என்று மால்தி கூறியுள்ளார்.
அவர் கதவை திறந்தபோது, பாலுறவு வைத்து கொண்டால் அவர் எடுக்க துவங்கியுள்ள திரைப்படம் ஒன்றில் மால்திக்கு ஒரு கதாபாத்திரம் வழங்கப்படும் எனக்கூறி, மால்திக்கு முன்பாகவே சுய இன்பம் காண துவங்கியதாக மால்தி தெரிவித்திருக்கிறார்.
பின்னர், தன்னை பின்னால் தள்ளி, தன் மீது படுத்தார் என்றும், அது தன்னுடைய சம்மதத்தோடு நடைபெற்ற பாலுறவு அல்ல, வெய்ன்ஸ்டெயின் ஆணுறை பயன்படுத்தவில்லை என்றும் மால்தி கூறியுள்ளார்.
நான் வெறுப்பில் நிறைந்திருந்தேன். அவர் என்னோடு பாலுறவு கொள்ளும்போது, நான் ஒத்துழைக்கவில்லை என்று நம்புகிறேன். நான் அப்படியே படுத்திருந்து என்னுடைய கண்களை மூடி கொண்டேன். அது முடிந்துவிட விரும்பினேன். நானொரு பிணம் போல இருந்தேன். அதன் பிறகு முழுமையான வெறுப்போடு அங்கு படுத்து கிடந்தேன் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அடுத்த நாள் நடிப்பதற்கான ஸ்கிரிப்ட் ஒன்றை மால்தி பெற்றுகொண்டார். பின்னர் லாஸ் ஏஞ்சலெஸூக்கு அவர் திரும்பினார்.
டேனியல் டே லூயிஸ், நிக்கோல் கிட்மேன் மற்றும் டேம் ஜூடி டென்ச் நட்சத்திரங்கள் நடிக்கின்ற, வைன்ஸ்டீன் தாயாரிக்கின்ற ‘நயன்’ திரைப்படத்தில் தனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்திருந்த உணர்வை பெற்றதாக மால்தி கூறியுள்ளார்.
பின்னர், பெவர்லி ஹில்ஸ் பெனின்சுலா ஹோட்டலில், தன்னை சந்திக்க வேண்டும் என்று வைன்ஸ்டீன் கேட்டுகொண்டதாகவும், உதவியாளர் ஒருவர் உடனிருப்பார் என்று கூறியதாகவும் மால்தி தெரிவித்துள்ளார்.
ஆனால், மால்தி அங்கு சென்றபோது, இன்னொரு பெண்ணோடு மூவரும் சேர்ந்து பாலுறவில் ஈடுபட வைன்ஸ்டீன் சொன்னதாக தெரிவித்திருக்கிறார்.
இதற்கு மால்தி மறுத்துவிட்டதாகவும், பின்னர் வைன்ஸ்டீனை அழைத்து அவருடைய திரைப்படம் ஒன்றில் கதாபாத்திரத்திரம் ஒன்றிலிருந்து தன்னை விடுவிக்க சொன்னபோது, அவர் கோபம் அடைந்ததாகவும், மிக மோசமாக வார்த்தைகளால் தன்னை திட்டியதாகவும் மால்தி கூறியுள்ளார்.
“ஹாலிவுட்டை சேர்ந்த பிற சக்திவாய்ந்த ஆண்களிடமிருந்தும் பாலியல் தொந்தரவுகளை தான் அனுபவித்திருப்பதாகவும் மால்தி தெரிவித்திருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறையில் அறிக்கை அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மால்தியின் வழக்கறிஞர் குளோரியா ஆல்ரெட் தகவல் தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு தன்னுடைய சம்மதம் இல்லாமல் வைன்ஸ்டீன் வாய்வழி உறவு கொண்டார் என்று முன்னாள் தயாரிப்பு உதவியாளரான மிமி ஹலேய் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பின்னர், இந்த செய்தியும் வெளிவந்துள்ளது.
தன்னை கட்டாயப்படுத்தி வாய்வழி உறவு கொண்டதாக கூறியுள்ள நடிகையும், மாடல் அழகியுமான டொமினிக் ஹூட், கவனக்குறைவு புகார் குற்றச்சாட்டை கூறி ‘த வைன்ஸ்டீன்’ நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்த முதல் பெண்ணாவார்.
பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் தாக்குதல் உள்பட இந்த மாதத்தில் வைன்ஸ்டீனுக்கு எதிராக டஜன்கணக்கான பெண்கள் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். பரஸ்பர சம்மதமற்ற பாலுறவு என்ற அனைத்து குற்றச்சாட்டுக்களையும், அவர் “வெளிப்படையாக மறுத்திருக்கிறார்”.