உலகின் பிரபல செல்வந்தர்களை வரிசைப்படுத்தி பட்டியலிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது கதாநாயகராக அதிரடி நாயகன் ஜாக்கி சானை குறிப்பிட்டுள்ளது.
இதுவரை ஹாலிவுட் என்றழைக்கப்படும் அமெரிக்க திரையுலக பிரபலங்களின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு போன்றவற்றை மட்டுமே வரிசைக் கிரயப்படுத்தி வந்த இந்த பத்திரிகை, முதல் முறையாக அமெரிக்காவை கடந்து வெளிநாடுகளில் உள்ள ஆங்கில திரைப்படத் துறையினரையின் சம்பளப் பட்டியல் மற்றும் சொத்து மதிப்பை இந்த ஆண்டு பட்டியலிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ‘அயர்ன் மேன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த ராபர்ட் டவ்னி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் அவர் படங்களில் நடிப்பதற்காக 80 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெற்றுள்ளார்.
இதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் சீனாவை சேர்ந்த அதிரடி நாயகனான ஜாக்கி சான் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 350 கோடி ரூபாய்) சம்பாதித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 350 மில்லியன் அமெரிக்க டாலர் தேறும் எனவும் அந்த பத்திரிகை மதிப்பீடு செய்துள்ளது.