ஒரே பாலினத்தை சேர்ந்த இணையரான ஸ்கிப்பர் மற்றும் பிங் எனும் இரண்டு பென்குவின்கள் வெகு காலமாக தங்களுக்கென குழந்தை ஒன்றை பெறும் நோக்கத்தில் இருந்ததாக அந்த உயிரியல் பூங்காவின் செய்தித்தொடர்பாளர் மாக்ஸிமில்லியன் ஜாகெர் உள்ளூர் செய்தித்தாளியிடம் தெரிவித்துள்ளார்.
முட்டையிட்ட பென்குவின் அதை அனாதையாக விட்டுச்சென்றுவிட்ட நிலையில், இந்த ஒருபாலுறவு இணை அதன் “உண்மையான பெற்றோரை போன்று கவனிப்பதில் அக்கறையாக உள்ளன” என்றும் முட்டையின் வெப்பநிலையை காப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பூங்கா பராமரிப்பாளர்கள் அளித்த ஒரு சிறிய ஊக்கத்திற்குப் பிறகு, பொறாமைமிக்க போட்டியாளர்களிடமிருந்து தங்கள் விலைமதிப்பற்ற முட்டையை பாதுகாக்க இந்த பென்குவின்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன.
“முட்டையின் வெப்பநிலையை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதற்கு முட்டை பென்குவினின் காலுக்கடியில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். அவற்றிற்கு இது ஏற்கனவே நன்கு தெரிந்திருக்கிறது” என்று கூறுகிறார் நொர்பேர்ட் சஹ்மேல் எனும் உயிரியல் பூங்காவின் பராமரிப்பாளர் ஒருவர்.
பத்து வயதாகும் இந்த பென்குவின்கள் ஜெர்மனியின் ஹாம்பர்க் பூங்காவிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் பெர்லினுக்கு கொண்டுவரப்பட்டன.
மனிதர்களை போன்றே, பென்குவின்கள் போன்ற விலங்கினங்களிலும் ஒருபாலுறவு என்பது இயல்பான ஒன்றாகவே உள்ளது. இவற்றில் காட்டில் வாழ்பவை, பூங்காக்களில் வாழ்பவை என்று எவ்வித வித்தியாசமும் இல்லை.
இந்தாண்டு லண்டனில் நடைபெற்ற ஒருபாலுறவு நிகழ்வு மற்றும் அயர்லாந்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் மூலம் எட்டு பென்குவின்கள் தங்களது பாலினத்தை சேர்ந்த இணையை தேர்ந்தெடுத்து ஒன்று சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
“தற்போது இந்த ஒருபாலுறவு பென்குவின்கள் அடைகாத்து வரும் முட்டை முழுமையாக கருவுற்ற ஒன்றா என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை” என்று கூறும் மாக்ஸிமில்லன், இதன் முடிவு பென்குவின்களுக்கு எப்படிப்பட்ட மனமாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்று நினைத்து வருந்துவதாக கூறுகிறார்.
உண்மையிலே நற்பேறுகொண்டதாக இருந்தால், பெர்லின் உயிரியல் பூங்கா வரலாற்றில் முதல் முறையாக ஒருபாலின இணையினருக்கு பிறந்த பெங்குவின் செப்டம்பர் மாதம் முட்டையிலிருந்து வெளிவரும்.