சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
இதில் தலைவராக அத்தியப்பனும், துணைத்தலைவராக கண்ணனும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் பதவிக்கு நடிகர் ராதாரவி அணியில் மேயர் சவுண்டப்பனும், விஷால் அணி தரப்பில் ரகுபதியும் போட்டியிட்டனர். இதேபோல் துணைச்செயலாளர் பதவிக்கு முத்துகிருஷ்ணன், ராஜசிகாமணி ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஏ.பி.சக்திவேல் மற்றும் சுந்தரமும் போட்டியிட்டனர். இதுதவிர, 10 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு (ஆண்-7, பெண்-3) 18 பேர் போட்டியிட்டனர்.
சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 217 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள நாடக நடிகர் சங்க கட்டிடத்தில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் மூத்த நாடக நடிகர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். முடிவில் 217 வாக்குகளில் 205 வாக்குகள் பதிவானது. ஒரு வாக்கு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன. முடிவில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மேயர் சவுண்டப்பன் 131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரகுபதிக்கு 74 வாக்குகள் (விஷால் அணி) கிடைத்தது. இதேபோல் ராதாரவி அணியில் இருந்து துணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட முத்துகிருஷ்ணன் 138 வாக்குகளும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ஏ.பி.சக்திவேல் 152 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட மாலா, ரம்யா, விஜயகுமாரி உள்பட 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து செயலாளர் பதவிக்கு வெற்றி பெற்ற மேயர் சவுண்டப்பன் மற்றும் இதர புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க தேர்தல் முடிவு குறித்து நடிகர் விஷால் அணியின் பிரதிநிதி ஜெரால்டு, செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த ரகுபதி ஆகியோர் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
சேலம் நாடக நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியை சேர்ந்த செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ரகுபதிக்கு 74 ஓட்டுகள் கிடைத்தது. அவர் தோல்வி அடைந்தாலும் இதுவே விஷால் அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று பல்வேறு மிரட்டல்கள் வந்தது. இருப்பினும் துணிச்சலுடன் போட்டியிட்டோம். எங்களுக்கு கிடைத்த 74 ஓட்டுகளும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க கூடிய தகுதியுள்ளவர்களின் ஓட்டுகள் ஆகும். நடிகர் சங்க தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால் மீதியுள்ள ஓட்டுகளை பெறுவதற்கு மற்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.