ஐசிசி யின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 7 ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
அவர் 697 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்கிறார்.
ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட புதிய தரவரிசைபடி, லோகேஷ் ராகுல் 816 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் தொடர்கிறார்.
இங்கிலாந்தின் டேவிட் மலான் முதலிடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆஸம் 2 ஆம் இடத்திலும் இருக்கின்றனர்.
ராகுல் கோலியைத் தவிர ஐசிசியின் டி20 தரவரிசைக்கான பேட்ஸ்மேன், பெளலர், ஆல்-ரவுண்டர் பிரிவில் வேறு இந்தியர்கள் எவரும் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் “தொடர் நாயகன்’ விருது வென்ற நியூஸிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் தனது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக 9-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
நியூஸிலாந்தின் டேவன் கான்வே 62 ஆவது இடத்துக்கும், கிளென் பிலிப்ஸ் 72 ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். பிலிப்ஸ் இந்த இடத்துக்கு வருவது இது முதல் முறையாகும். பாகிஸ்தான் அணியில் முகமது ஹஃபீஸ் 33 ஆவது இடத்துக்கும், முகமது ரிஸ்வான் 158ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
பெளலர்கள் பிரிவில் நியூஸிலாந்தின் டிம் செளதி 7 ஆவது இடத்துக்கும், ஸ்காட் குகெலெஜன் 92 ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். பாகிஸ்தானின் ஃபஹீம் அஷ்ரஃப் 13 ஆவது இடத்துக்கும், ஷாஹீன் அஃப்ரிதி 16 ஆவது இடத்துக்கும், ஹாரிஃப் ரெளஃப் 67 ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
பெளலர்கள் பிரிவில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், இங்கிலாந்தின் ஆதில் ரஷீத் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் பிரிவில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி, வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
டி20 அணிகள் பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா முதல் 3 இடங்களில் உள்ளன.