கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா 1 – 0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது.
இத்துடன் 3 ஆட்டங்களில் 2 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ள ஆர்ஜென்டீனா, ஏ பிரிவில் முதலிடத்துக்கு வந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பராகுவே 2 ஆட்டங்களில் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.
சாவ் பாவ்லோ நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் 10 ஆவது நிமிடத்திலேயே ஆர்ஜென்டீனாவுக்காக கோலடித்தார் அலெக்ஸாண்ட்ரோ டாரியோ கோம்ஸ். டி மரியா பாஸ் செய்த பந்தை அவர் கோலாக மாற்றுவதற்கு தடையேதும் இல்லாமல் போனது.
18 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை மெஸ்ஸி வீணடித்தார். 46 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு கிடைத்த கார்னர் கிக்கில் உதைக்கப்பட்ட பந்தை தவறுதலாக ஓன் கோல் அடித்தார் பராகுவே வீரர் அலோன்சோ. ஆனால் அதை ஆஃப் சைட் என்று கூறி கள நடுவர் நிராகரித்தார். எஞ்சிய நேரத்தில் பராகுவே கோலடிக்காததால் ஆர்ஜென்டீனா வென்றது.
சிலி – உருகுவே ஆட்டம் டிரா
இப்போட்டியில், சிலி – உருகுவே அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1 – 1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
3 ஆட்டங்களில் விளையாடியுள்ள சிலி, 2 ஆவது முறையாக ஆட்டத்தை சமன் செய்துள்ளது. 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள உருகுவே முதல் முறையாக சமன் செய்துள்ளது.
இந்த ஆட்டத்தில் 26 ஆவது நிமிடத்தில் சக வீரர் பிரெரெடன் உதவியுடன் சிலி வீரர் எட்வர்டோ வர்காஸ் கோலடித்தார். 66 ஆவது நிமிடத்தில் உருகுவேயின் கார்னர் கிக்கை தடுக்க முயன்ற சிலி வீரர் ஆர்துரோ விடாலின் கால் பட்டு பந்து ஓன் கோல் ஆனது. இதனால் இறுதியில் ஆட்டம் டிரா ஆனது.