யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து 2 – 0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்று காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. காலிறுதியில் அந்த அணி, உக்ரைனை எதிர்கொள்கிறது.
லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 16 ஆவது நிமிஷத்திலேயே இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் 25 யார்ட் தூரத்திலிருந்து ஒரு லாங் கிக் மூலம் கோலுக்கு முயற்சிக்க, ஜெர்மனி கோல்கீப்பர் மேனுவல் நியுவர் அதை பாய்ந்து தடுத்தார். அடுத்த நிமிஷத்திலேயே அந்த அணியின் டிரிப்பர் மேற்கொண்ட கோல் முயற்சியும் பலனளிக்காமல் போனது. இவ்வாறாக இங்கிலாந்தின் தொடர் கோல் முயற்சிகள் நூலிழையில் தவறி வந்தன.
இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி நிறைவடைந்தது. 2 ஆவது பாதி தொடங்கி 48 ஆவது நிமிஷத்தில் ஜெர்மனி வீரர் ஹாவெர்ட்ஸ் துல்லியமாக கோல் போஸ்ட் நோக்கி கிக் செய்த பந்தை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் திறம்படத் தடுத்தார்.
இந்நிலையில், 75 ஆவது நிமிஷத்தில் தனது கோல் கணக்கை தொடங்கியது இங்கிலாந்து. கோல் போஸ்டின் இடது பக்கமாக பந்தை கடத்தி வந்த இங்கிலாந்து வீரர் லூக் ஷா, அதை கோல் போஸ்டின் வலதுபக்கமாக இருந்த சக வீரர் ஹேரி கேனை நோக்கி கிராஸ் செய்ய, இடையில் பாய்ந்த ரஹீம் ஸ்டெர்லிங் பந்தை லாவகமாக தட்டி கோலடித்தார்.
81 ஆவது நிமிஷத்தில் ஸ்டெர்லிங் கவனக் குறைவாக பந்தை தவறவிட அது ஜெர்மனி வீரர் ஹாவெர்ட்ஸிடம் சிக்க, அதை அவர் சக வீரர் முல்லரிடம் வழங்க, முல்லர் பந்தை மிக வேகமாக கடத்திக் கொண்டு போனார். தடுப்பாட்ட வீரர்கள் இல்லாத நிலையில் இங்கிலாந்து கோல்கீப்பர் பிக்ஃபோர்டு முன்னோக்கி தடுக்க வர, முல்லர் உதைத்த பந்து நூலிழையில் வைடாகச் சென்றது.
86 ஆவது நிமிஷத்தில் ஜேக் கிரெலிஷ் கோல் போஸ்டின் இடது பக்கமிருந்து கிராஸ் செய்த பந்தை, ஹேரி கேன் குறுக்கே புகுந்து லாவகமாக தலையால் முட்டி கோலடித்தார். இதனால் இங்கிலாந்தின் கோல் எண்ணிக்கை 2 ஆனது. எஞ்சிய நேரத்தில் ஜெர்மனிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் பார்த்துக் கொண்டு வெற்றி பெற்றது அந்த அணி.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து – ஜெர்மனி ஆட்டத்தைக் காண, இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மற்றும் மகன் ஜார்ஜுடன் வந்திருந்தார். தங்களது அணியின் ஒவ்வொரு கோலுக்கும், இறுதியின் அதன் வெற்றிக்கும் இதர ரசிகர்களைப் போலவே இளவரசர் வில்லியமும் உற்சாகமாக குதித்துக் கொண்டாடினார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டமே, ஜெர்மனியின் பயிற்சியாளராக ஜாவ்கிம்முக்கு கடைசி ஆட்டம். இந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியுடன் ஜெர்மனி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அவருக்குப் பிறகு ஹன்சி ஃப்ளிக் ஜெர்மனி பயிற்சியாளராகிறார்.
15 ஆண்டுகளாக ஜாவ்கின் ஜெர்மனி பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது காலத்தில் 2014 இல் ஜெர்மனி உலகக் கோப்பை சாம்பின் ஆனது. 2016 யூரோ கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. 2018 உலகக் கோப்பை போட்டியில் தொடக்க நிலையிலேயே வெளியேறியேது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவ் நகரில் நடைபெற்ற கடைசி நாக் அவுட் சுற்றில் உக்ரைன் 2 – 1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 27 ஆவது நிமிஷத்திலேயே முன்னிலை பெற்றது உக்ரைன். சக வீரர் தூக்கியடித்த பந்தை உக்ரைன் வீரர் யார்மொலென்கோ தட்டிக் கொண்டு கோல் போஸ்டின் வலது பக்கமாக பாக்ஸூக்குள்ளாக வந்து பந்தை லேசாக தூக்கியடித்து கிராஸ் செய்தார். கோல் போஸ்டின் இடது பக்கம் நின்று அதைப் பெற்றுக்கொண்ட அலெக்ஸாண்டர் ஜின்சென்கோ ஸ்வீடன் தடுப்பாட்டத்தையும், கோல் கீப்பரையும் கடந்த வகையில் கோலடித்தார்.
43 ஆவது நிமிஷத்தில் ஆட்டத்தை சமன் செய்தது ஸ்வீடன். சக வீரர் ஐசக் பாஸ் செய்த பந்தை பெற்றுக் கொண்ட ஸ்வீடன் வீரர் எமில் ஃபோர்ஸ்பெர்க், 25 யார்ட் தூரத்திலிருந்து துல்லியமாக பந்தை கோல் போஸ்ட்டுக்குள்உதைத்தார். இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் சமனில் முடிந்தது.
2 ஆவது பாதியில் 55 ஆவது நிமிஷத்தில் உக்ரைன் சார்பில் யார்மொலேன்கோவும், 56 ஆவது நிமிஷத்தில் ஸ்வீடன் தரப்பில் ஃபோர்ஸ்பெர்கும் கோலுக்கு மேற்கொண்ட முயற்சிகள் கோல் போஸ்டை தாண்டிச் சென்றது. தொடர்ந்து கூடுதல் கோலின்றி ஆட்ட நேரம் நிறைவடைய, கூடுதலாக 30 நிமிஷங்கள் வழங்கப்பட்டது.
கடைசியாக (120+1 நிமிஷம்) உக்ரைன் வீரர் ஜின்சென்கோ இடதுபக்க லைனில் இருந்து பாக்ஸூக்குள்ளாக கிராஸ் வழங்க, அதை துல்லியமாக தலையால் முட்டி கோலடித்தார் சக வீரர் ஆர்டென் டோவ்பிக். இதனால் உக்ரைன் 2 – 1 என்ற கோல் கணக்கில் வென்றது.
98 ஆவது நிமிஷத்தில் உக்ரைன் வீரர் பெசடின் பந்தை கடத்தி வந்ததை தடுக்க முயன்ற ஸ்வீடன் வீரர் மார்கஸ் டேனியல்சன் பெசடினின் கால் வளையும் அளவுக்கு காலில் உதைத்தார். இது தொலைக்காட்சி ரிவியூவில் தெரியவந்ததை அடுத்து டேனியல்சனுக்கு சிகப்பு அட்டை காட்டப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் ஸ்வீடன் 10 வீரர்களுடன் ஆடும் நிலைக்கு வந்தது. காயமடைந்த பெசடினுக்குப் பதிலாக சைஹான்கோவ் களம் புகுந்தார்.
கடந்த 1966 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில், லண்டனின் வெம்ப்ளி மைதானத்தில் ஜெர்மனியை வீழ்த்தியிருந்தது இங்கிலாந்து (4 – 2). அதன் பிறகு அந்த மைதானத்தில் ஜெர்மனியை சந்தித்த 3 ஆட்டங்களிலும் இங்கிலாந்து வென்றதில்லை. தற்போது 4 ஆவது ஆட்டத்தில் வென்றுள்ளது.
ஒரு போட்டியில் முதல் 4 ஆட்டங்களில் எதிரணிக்கு கோல் வாய்ப்பு வழங்காமல் வென்ற 2 ஆவது அணி என்ற பெயரை இங்கிலாந்து பெற்றுள்ளது. முன்னதாக ஜெர்மனி 2016 இல் அத்தகைய பெயரை பெற்ற முதல் அணியானது.
லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில் இங்கிலாந்து விளையாடிய 300 ஆவது ஆட்டம் இதுவாகும்.
பிரதான போட்டிகளில் இங்கிலாந்து – ஜெர்மனி மோதிக் கொண்டது இது 8 ஆவது முறை. இங்கிலாந்து தற்போது 3 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்க, ஜெர்மனி 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 3 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியின் நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து 90 நிமிஷ ஆட்டத்துக்குள்ளாகவே வெற்றியைப் பதிவு செய்தது இது முதல் முறையாகும்.
பிரதான போட்டி ஒன்றின் காலிறுதி ஆட்டத்துக்கு உக்ரைன் முன்னேறியது இது 2-ஆவது முறை. இதற்கு முன் 2006 உலகக் கோப்பை போட்டியில் அந்த அணி காலிறுதிக்கு முன்னேறியது.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு 3 ஆவது முறையாக முன்னேறியிருந்த ஸ்வீடன், அதிலிருந்தும் வெளியேற்றப்பட்டது. முந்தைய இரு முறையும் அந்த அணி அவ்வாறே வெளியேறியது.