1987-ல் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் 18 வயதில் நடிகையாக அறிமுகமானார் பிரபல நடிகை பானு ப்ரியாவின் தங்கையான சாந்தி ப்ரியா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்திப் படங்களில் நடித்த சாந்தி ப்ரியா, 1995-ல் பாஸிகர் படத்தில் நடித்த சித்தார்த் ரேவைத் திருமணம் செய்துகொண்டார். 2004-ல் சித்தார்த் மரணமடைந்தார்.
இரு மகன்கள் உள்ளதால் சொந்த வாழ்க்கையில் அதிகக் கவனம் செலுத்தினார் சாந்தி ப்ரியா. கடைசியாக 1994-ல் திரைப்படங்களில் நடித்தார். நடுவில் சில தொலைக்காட்சித் தொடர்களில் மட்டும் நடித்தார்.
2012-லிருந்து நடிப்பதிலிருந்து ஒரேடியாக விலகியிருந்த 50 வயது சாந்தி ப்ரியா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜீ ஒரிஜினல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் எம்.எக்ஸ். பிளேயர் ஓடிடிக்காக ஓர் இணையத் தொடரில் நடிக்கவுள்ளார்.