மைக்ரோசாப்டின் ஆபிஸ்365 சந்தாதாரர்களாக இருப்பவர்கள் அந்த நிறுவனத்தின் ஒண்ட்ரைவ் வசதியை பயன்படுத்தி க்ளவுட் கம்பியூட்டிங் முறையில் முக்கிய கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்களை இலவசமாக சேமித்துவைக்க முடியும். அதுவும் எவ்வளவு வேண்டுமானாலும்.
ஆனால், இந்த அன்லிமிட்டெட் சேமிப்பு வசதியை சில வாடிக்கையாளர்கள் தவறாக பயன்படுத்தி திரைப்படங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை 75 டி.பி அளவுக்கு சேமித்துவைத்துள்ளதால், ஒன்ட்ரைவ் அன்லிமிட்டெட் சேமிப்பு வசதியை நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக ஒவ்வொரு ஆபிஸ்365 சந்தாதாரர்களுக்கும் 1டி.பி சேமிப்பு திறனை மட்டும் வழங்க முடிவு செய்துள்ளது. 1டி.பி.-க்கு அதிகமாக பயன்படுத்த விரும்புபவர்கள் 50ஜி.பி. சேமிப்பு திறனை ஒரு மாதம் பயன்படுத்த 1.99 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இதற்கு முன்பாக இருந்த 100ஜி.பி, 200ஜி.பி திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.
அதேபோல் இலவச ஒன்ட்ரைவ் சேமிப்பு அளவானது 15ஜி.பி-யில் இருந்து 5ஜி.பி.-யாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒன்ட்ரைவ் திட்டத்தின் சில பிரிவுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளநிலையில், சில பிரிவுகள் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. தற்போது 1டி.பி.-க்கு அதிகமாக சேமித்து வைத்திருக்கும் சில வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டிற்குள்ளாக தங்கள் சேமிப்புகளை திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்டின் மேற்கூறிய நடவடிகையால் பல வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஒரு சிலர் செய்த தவறுகளுக்கு மற்ற அனைவரும் தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.