கமல் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான படம் ‘உத்தம வில்லன்’. இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். இதில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி, ஊர்வசி, நாசர், கே.விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மேலும் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கமலும், லிங்குசாமியும் சேர்ந்து தயாரித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். கமல் ஒரு நடிகனாகவே இதில் நடித்திருந்தார். வாழ்நாளை எண்ணி கொண்டிருக்கும் ஒரு பெரிய நடிகன், தன்னுடைய குருவுடன் இணைந்து மக்களுக்கு மறக்க முடியாத திரைப்படத்தை உருவாக்க நினைப்பதே படத்தின் கதை. இதில் கமலின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
தற்போது இப்படத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் இண்டர்நேஷ்னல் திரைப்பட விழாவில் விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த சவுண்ட் டிசைன் என ஐந்து விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. மேலும் ரஷ்யன் திரைப்பட விழாவிலும் சிறந்த இசைக்கான விருது இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘உத்தமவில்லன்’ விருதுகளை வாங்கி குவித்திருப்பது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.