நாயகன் ஸ்ரேயாஸ் போட்டோகிராபர். நாயகி சதா மாடலிங். இருவரும் காதலித்துக் கொண்டு ஒரே பிளாட்டில் தங்கி வருகிறார்கள். இந்நிலையில், ஸ்ரேயாஸின் நண்பனுக்கு திருமணம் நிச்சயம் நடக்கிறது. இதற்காக பார்ட்டி ஒன்று நடக்கிறது. இதில் ஸ்ரேயாஸ், சதா இருவரும் கலந்துக் கொள்கிறார்கள்.
இந்த பார்ட்டியில் ஸ்ரேயாஸ் அதிகம் குடித்து விட்டதால், சதா காரை ஓட்டி வருகிறார். வரும் வழியில் எதிர்பாராத விதமாக ஒரு பெண் மீது காரை ஏற்றி விடுகிறார் சதா. இறந்து கிடக்கும் அந்த பெண்ணை பார்த்து பயந்து, காரை நிறுத்தாமல் ஓட்டி சென்று விடுகின்றனர்.
அதன்பின், ஸ்ரேயாஸ் எடுக்கும் எல்லா போட்டோக்களிலும் ஒரு மர்மமான உருவம் தெரிகிறது. அதுபோல் சதாவிற்கு ஒரு அமானுஷ்ய சக்தி ஒன்று பயமுறுத்துகிறது. இருவரையும் அடிக்கடி பயமுறுத்துவது ஒரு பெண் ஆவி என்று தெரிந்துக் கொள்கிறார்கள்.
அதன்பின்னர் ஸ்ரேயாஸின் நண்பர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள்.
இறுதியில் ஸ்ரேயாஸின் நண்பர்கள் மர்மமான முறையில் இறக்க காரணம் என்ன? அந்த ஆவி யார்? அந்த ஆவிக்கும் ஸ்ரேயாஸுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரேயாஸ், சதாவுக்கு காதலனாகவும், பல மாடலிங்கை போட்டோ எடுக்கும் போட்டோகிராப்பராகவும், ஆவிக்கு பயப்படுவதுமாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி சதா, அழகு பதுமையாக நடித்திருக்கிறார். கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஆவிக்கு பயந்து ரசிகர்களையும் பயப்பட வைத்திருக்கிறார்.
இந்த படம் ‘கிளிக்’ என்னும் பெயரில் இந்தியில் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. தற்போது, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ‘மோனிகா ஹவுஸ்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
இக்கதை கொண்டு ஏற்கனவே தமிழில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. பேய் படங்கள் தமிழ் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருவதால், தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் சங்கீத் சிவன் சிறப்பாக இயக்கியிருக்கிறார். பல காட்சிகளில் ரசிகர்களை பயமுறுத்தியிருக்கிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவும், சந்தீப் சவுட்டாவின் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மோனிகா ஹவுஸ்’ மிரட்டல்.